காந்திநகர்: பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள வதோதரா மாவட்டத்தில் அமைந்துள்ள கம்பீரா பாலத்தின் ஒருபகுதி, புதன்கிழமை (ஜூலை 9) காலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அப்பாலத்தில் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததில் மேலும் பலர் காயமடைந்தனர்.
மஹிசாஹர் ஆற்றுக்குள் விழுந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மத்திய குஜராத் பகுதிகளையும், செளராஷ்டிராவையும் இணைக்கும்விதமாக 43 ஆண்டுகளுக்கு முன்பு கம்பீரா பாலம் கட்டப்பட்டது. புதன்கிழமை காலை 7.45 மணியளவில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
அப்போது பெரிய லாரியும், சில வாகனங்களும் பாலத்தில் சென்றுகொண்டிருந்தன. அவற்றுள் பல வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
ஆற்றில் விழுந்த பலரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததே இந்தப் பால விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் உடனடியாக விபத்துப் பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களின் உதவியோடு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 6 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சிங்வி தெரிவித்தார். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. முக்கியப் பாலம் இடிந்து விழுந்துள்ள நிலையில், அவ்வட்டாரத்தில் போக்குவரத்தும் வர்த்தகமும் முடங்கியுள்ளன.

