81 இந்திய விமான நிலையங்களுக்கு ரூ.108,530 மி. இழப்பு: அரசாங்கம்

2 mins read
41a59071-d6e1-45f3-84c0-4d9ca8f9e5cd
டெல்லியின் சாஃப்டார்ஜுங் விமான நிலையம். - படம்: விக்கிப்பீடியா / இணையம்

புதுடெல்லி: இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) நடத்தும் 81 விமான நிலையங்கள் கடந்த 10 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ108,529 மில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளன.

அவற்றில் 22 விமான நிலையங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை.

இந்தியாவின் சிவில் விமானத்துறை துணை அமைச்சர் முரளிதர் மோஹோல் இம்மாதம் நான்காம் தேதி இத்தகவல்களை நாடாளுமன்ற மேலவையில் வெளியிட்டார். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெபி மேத்தர் ஹிசாம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இழப்பை எதிர்கொண்டுவரும் இந்திய விமான நிலையங்களைப் பற்றிய தகவல்கள், அதிகப் பயணிகள் இல்லாத விமானச் சேவைகளை நிறுத்துவதற்கான திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி திருவாட்டி பி மேத்தர் ஹிசாம் கேள்வி எழுப்பினார். எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாத விமான நிலையங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறதா என்றும் அவர் கேட்டார்.

இந்தியா முழுவதும் 81 விமான நிலையங்கள் ரூ.108,530 மில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளது 2015-16, 2024-25 ஆகிய காலகட்டங்களுக்கான புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அவற்றில் டெல்லியின் சாஃப்டார்ஜுங் விமான நிலையம்தான் ஆக அதிக பாதிப்பை எதிர்கொண்டது. அது, ரூ673,910 மில்லியன் இழப்பைச் சந்தித்தது.

அதற்கு அடுத்தபடியாக அகர்ட்டாலா, ஹைதராபாத், டெஹ்ராடுன், விஜயவாடா விமான நிலையங்கள் ஆக அதிக இழப்பைச் சந்தித்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் கேட்கப்பட்டபோது, இந்தியத் தலைநகர் டெல்லியின் முதன்மை விமான நிலையமாக சாஃப்டார்ஜுங் இருந்தாலும் அதில் தற்போது செயல்பாடுகள் அதிகம் இல்லை என்று விமானத்துறை அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். தற்போது அங்கு பயணிகள் விமானச் சேவைகள் வழங்கப்படுவதில்லை. மிகவும் முக்கியப் புள்ளிகளை டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லவே சாஃப்டார்ஜுங் பயன்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

டோனக்கேடா, டாப்பாரிஸோ, ஜோக்பானி, முஸாஃபார்பூர், ராக்சாவ்ல், டீசா உள்ளிட்ட 22 விமான நிலையங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை.

செயல்பாட்டில் இல்லாத அல்லது அதிக விமானச் சேவைகள் வழங்கப்படாத விமான நிலையங்களிலிருந்து கூடுதல் விமானச் சேவைகளை இயங்க வைக்கும் நோக்கில் ‘உதே தே‌ஷ் கா ஆம் நாக்ரிக்’ (RCS-UDAN) எனப்படும் வட்டாரப் பயணத் தொடர்புத் திட்டம் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி தொடங்கப்பட்டதையும் திரு மோஹோல் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்