தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணையம் வழியாக அமெரிக்கர்களிடம் ரூ.350 கோடி மோசடி; மூவர் கைது

2 mins read
8d04c784-2a94-43f8-a889-75c0488a82b5
பிடிபட்டவர்களிடமிருந்து ரூ.54 லட்சம் ரொக்கம், எட்டுக் கைப்பேசிகள், மடிக்கணினிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. - மாதிரிப்படம்: பிக்சாபே

புதுடெல்லி: கடந்த 2023ஆம் ஆண்டுமுதல் அமெரிக்கர்களிடம் ரூ.350 கோடிக்கும் மேல் (S$52.11 மில்லியன்) பணம் பறித்த இணைய மோசடிக் கும்பலை இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முறியடித்தது.

தொழில்நுட்ப ஆதரவு வழங்குவதுபோல் ஏமாற்றி பணமோசடி செய்த சந்தேகத்தின்பேரில் முக்கியப் பேர்வழிகள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 15) அதிகாரிகள் கூறினர்.

அமெரிக்காவின் எஃப்பிஐ அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்மூலம் ஜிகர் அகமது, யாஷ் குரானா, ஜீத் சிங் பாலி என்ற அம்மூவரும் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ.54 லட்சம் ரொக்கம், எட்டுக் கைப்பேசிகள், மடிக்கணினிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இம்மாதம் 18ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, 20ஆம் தேதிமுதல் அமிர்தசரசிலும் டெல்லியிலும் சிபிஐ தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.

“2023-25 காலகட்டத்தில், இந்தியாவில் இருந்தபடியே அமெரிக்கர்களின் கணினிகள், வங்கிக் கணக்குகளைக் கையாண்டு மோசடி செய்ய அவர்கள் சதித்திட்டம் தீட்டினர்,” என்று சிபிஐ பேச்சாளர் ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தார்.

“அமெரிக்கக் குடிமக்களின் கணினிகள், வங்கிக் கணக்குகளுக்குள் நுழைந்த மோசடிப் பேர்வழிகள், அவர்களின் பணம் பறிபோகும் அபாயத்தில் இருப்பதாகக் கூறினர். பின்னர் அவர்களிடம் நயமாகப் பேசி, 40 மில்லியன் அமெரிக்க டாலரைத் தங்களது மின்னிலக்க நாணயப் பணப்பைகளுக்கு மாற்றிவிடச் செய்தனர்,” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தங்களது அதிரடி நடவடிக்கையின்போது, சட்டவிரோத அழைப்பு மையத்தில் இருந்தபடி குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 34 பேரை சிபிஐ கையும் களவுமாகப் பிடித்தது.

அமிர்தசரசில் உள்ள ‘குளோபல் டவர்’ கட்டடத்தில் ‘டிஜிகாப்ஸ் தி ஃபியூச்சர் ஆஃப் டிஜிட்டல்’ என்ற பெயரில் அந்த அழைப்பு மையம் இயங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்து 85 வன்தகடுகள், 16 மடிக்கணினிகள், 44 கைப்பேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

“ஆப்பரேஷன் சக்ரா-4 நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிபிஐயின் அனைத்துலக நடவடிக்கைகள் பிரிவு, அனைத்துலகக் காவல்துறையுடனும் (இன்டர்போல்) மற்ற நாடுகளின் சட்ட அமலாக்க அமைப்புகளுடனும் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை விரைந்து அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று சிபிஐ அதிகாரி ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்