ஜெய்ப்பூர்: எந்த வேலைக்கும் செல்லாமலேயே ரூ.37 லட்சம் சம்பாதித்த அதிகாரியின் மனைவி குறித்து அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் இயக்குநராக உள்ளார் பிரதியுமான் தீக்சித்.
இவர் அரசு ஒப்பந்தப் பணிகளைப் பெறும் இரண்டு தனியார் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுள்ளார். அவற்றுள் ஒரு நிறுவனத்தில் தனது மனைவி வேலை பார்ப்பதாகவும் மற்றொரு நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக இருப்பது போன்றும் சித்திரித்துள்ளார்.
ஒரியன்புரோ சொல்யூஷசன்ஸ், ட்ரீஜென் மென்பொருள் கழகம் ஆகிய அந்த இரண்டு நிறுவனங்களும் மாநில அரசின் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.
பிரதியுமான் தீக்சித் பொறுப்பேற்ற பிறகு, அரசு ஒப்பந்தங்களைப் பெற வேண்டுமானால் தமக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் தர வேண்டும் என அவ்விரு நிறுவனங்களையும் கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவரது மனைவி பூனம் அந்த நிறுவனங்களில் பணியாற்றுவது போன்ற ஆவணங்கள் சித்திரிக்கப்பட்டு, மாதந்தோறும் அவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவ்விரு நிறுவனங்களுக்கும் பூனம் ஒருநாள்கூட பணி தொடர்பாக சென்றதே இல்லை.
கடந்த 2019 ஜனவரி முதல் 2020 செப்டம்பர் வரை பூனம் தீக்சித்தின் ஐந்து வங்கிக்கணக்குகளுக்கு இந்த இரண்டு நிறுவனங்களும் பல தவணைகளில் ரூ.37,54,405 செலுத்தியுள்ளன. பூனம் வேலைக்கு வந்ததுபோன்ற போலி வருகைப்பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
பிரதியுமான் மீதான வேறொரு வழக்கின் விசாரணை நடந்தபோது எதிர்பாராத விதமாக இந்த முறைகேடும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

