ஹைதராபாத்: அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 24 பேர் மாண்டுபோயினர். இந்த விபத்து தெலுங்கானா மாநிலத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபத்தின்போது பேருந்து மீது லாரி மோதி கவிழ்ந்தது. இதில் அதே இடத்திலேயே 24 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரங்காரெட்டி மாவட்டம் மிரியாலகுடா அருகே அரசுப் பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் டிப்பர் லாரி பேருந்தின் மீது கவிழ்ந்ததில் அப்பளம் போல் நொறுங்கியதாக விபத்து நிகழ்ந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் வேகமாகச் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நீண்ட நேரம் போராடிய பிறகே பேருந்து மீது விழுந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்த முடிந்தது.
அதன் பிறகே படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடல்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் 70 பேர் பயணம் மேற்கொண்டதாகத் தெரிகிறது. தண்டூரில் இருந்து ஹைதராபாத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதுதான் பேருந்து விபத்துக்குள்ளானது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதே காரணமாக இருக்கக்கூடும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
இந்த நெஞ்சைப் பதற வைக்க விபத்து தொடர்பாக இந்திய அதிபர் திரௌபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

