புதுடெல்லி: பிரதமரின் ‘ஜன் தன்’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட 56.04 கோடி வங்கிக் கணக்குகளில் 23 விழுக்காடு தற்போது செயல்படாத நிலையில் இருப்பதாக இணை நிதியமைச்சர் பங்கஜ் சௌத்ரி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் ஏறத்தாழ 13.04 கோடி ‘ஜன் தன்’ கணக்குகள் செயல்படாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆக அதிகமாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2.75 கோடிக் கணக்குகளும், பீகாரில் 1.39 கோடிக் கணக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 1.07 கோடிக் கணக்குகளும் செயல்படாதவை.
ஈராண்டுகளுக்கும் மேலாக எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படாத சேமிப்புக் கணக்குகள் செயல்படாதவையாகக் கருதப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டி நெறிமுறைகள் குறிப்பிடுகின்றன.
இதனிடையே, செயல்படாத நிலையிலுள்ள ‘ஜன் தன்’ கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்காக 2025 ஜூலை 1ஆம் தேதிமுதல் செப்டம்பர் 30ஆம் தேதிவரை ஊராட்சி அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
நேரடி பணப் பரிமாற்றம் போன்ற திட்டங்களின் பலன்கள் இந்த கணக்குகளுக்கும் நேரடியாக அனுப்பப்படுகின்றன.
நாட்டிலுள்ள அனைவர்க்கும் வங்கிச் சேவைகள் எளிதாகக் கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ‘ஜன் தன்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

