புதுடெல்லி: இந்தியப் பங்குச் சந்தையின்மீது ஒவ்வொரு நாளும் 170 மில்லியன் இணையத் தாக்குதல்கள் நடப்பதாக அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவற்றிலிருந்து பங்குச் சந்தைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க இணையப் போர் வீரர்கள் கொண்ட குழு 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியப் பங்குச் சந்தைமீது ஒரே நாளில் 400 மில்லியன் இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவை அனைத்தையும் மிக நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டு இணையப் பாதுகாப்புக் குழு தகர்த்தெறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பங்குச் சந்தைமீது ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் இணையத் தாக்குதலை முறியடிப்பது மிகப்பெரிய சவாலானப் பணியாக இருக்கிறது என்றார் அந்த அதிகாரி.
பங்குச் சந்தையின் நடவடிக்கைகளை முடக்கி, அதில் பயனர்கள் யாரும் முதலீடுகளைச் செய்ய முடியாத அளவில் தடுப்பதும், முதலீட்டு விவரங்களைத் திருடுவது போன்றவற்றில் ஈடுபட தீங்குநிரல்களை அனுப்புவது, உலகளாவிய தடமறியும் துணைக்கோளச் செயல்முறை (ஜிபிஎஸ்) கருவியை ஏமாற்றுவது, இணையத்தளத்தை முடக்குவதற்கான வேலைகளில் ஈடுபடுவது போன்றவற்றில் மோசடிக்காரர்கள் ஈடுபடுவதாகக் கூறப்பட்டது.
பங்குச் சந்தைக்கு மட்டுமல்ல, அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.