புதுடெல்லி: இந்தியாவுக்குள் ஊடுருவ ஜம்மு, காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஏறக்குறைய 120 பயங்கரவாதிகள் நிறைய ஆயுதங்களுடன் தயார்நிலையில் காத்திருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள் அதிகம் இருப்பதாகக் கருதப்படும் பகுதிகளை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
பஹல்காம் தாக்குதல் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த இந்தியா, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் பயங்கரவாதிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்தது. பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. போர் நிறுத்தம் வேண்டி பாகிஸ்தான் தங்களிடம் மன்றாடியதாக இந்தியா தெரிவித்தது.
இந்நிலையில், வழக்கம்போல் இந்த ஆண்டும் மழை, குளிர்காலத்தைப் பயன்படுத்தி, இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அவர்களுக்குப் பாகிஸ்தான் உளவு அமைப்புகள் உதவி செய்வதாகவும் தற்போதுவரை 120 பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லையில் பதுங்கியிருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்து, ஆயுதங்களும் வழங்கி வருவதாக பாகிஸ்தான் மீது அனைத்துலக அரங்கில் பகிரங்கமாக இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது.
பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவும் அவ்வப்போது தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.