உலகின் ஆக வயதான நெட்டோட்ட வீரர் பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்

1 mins read
606006ef-035e-452e-82ea-24ab631ce34a
நெட்டோட்ட வீரர் பவுஜா சிங். - படம்: ஊடகம்

சண்டிகர்: இந்தியாவின் ஆக வயதான நெட்டோட்டப் பந்தய (மாரத்தான்) வீரர் பவுஜா சிங் சாலை விபத்தில் காலமானார். அவருக்கு வயது 114.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பியாஸ் என்ற கிராமத்தில் வசித்து வந்தார் பவுஜா. அங்குள்ள தனது வீட்டிற்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு, உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தமது 89வது வயதில் நெட்டோட்டப் போட்டியில் பங்கேற்று அனைவரையும் வியக்க வைத்த பவுஜா சிங், பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டம் பியாஸ் பிண்டி கிராமத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி, 1911ஆம் ஆண்டு பிறந்தவர்.

மேலும், 2003ஆம் ஆண்டு லண்டன் நெட்டோட்டப் போட்டியில் 6 மணி நேரம் 2 நிமிடங்களில் இலக்கை அடைந்து 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் உலக சாதனை படைத்த பெருமையும் இவருக்கு உண்டு.

கடந்த 2011ம் ஆண்டு தமது நூறாவது வயதில், டொரோண்டோ வாட்டர்ப்ரண்ட் நெட்டோட்டப் போட்டியை 8 மணி நேரம் 11 நிமிடங்கள், 6 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இதன் மூலம் உலகின் முதல் நூறு வயது நிரம்பிய நெட்டோட்டப் சாதனையாளர் என்ற பெருமையைப் பெற்றார் பவுஜா.

சீக்கியரான இவரை ‘தலைப்பாகை சூறாவளி’ என்றே பெரும்பாலானோர் குறிப்பிட்டனர்.

நெட்டோட்டப் பந்தய வீரரான பவுஜா சிங், 2012 டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூரில் நடைபெற்ற ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நெடுந்தூர ஓட்டத்தில் 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார்.
நெட்டோட்டப் பந்தய வீரரான பவுஜா சிங், 2012 டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூரில் நடைபெற்ற ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நெடுந்தூர ஓட்டத்தில் 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்