சிங்கப்பூர்த் தமிழினத்தின் அடையாளப் பெட்டகம்

3 mins read
906a2589-43e8-4db6-a21d-85f1116a8655
சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியத்தை மின்தளத்தில் வெளியிட்டு உரையாற்றினார் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: பே. கார்த்திகேயன்

சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை நினைத்த நேரத்தில் திரும்பிப் பார்க்க ஏதுவாக, விரல்நுனியே திறவுகோலாக ஓர் அசைவில் விரியும் சான்று ஆவணமாக வெளியீடு கண்டுள்ளது சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்.

நாட்டின் 60வது பிறந்தநாளுக்கு அன்புப் பரிசாகவும், தமிழ்ச் சமூகத்தின் நிலைக்களஞ்சியமாகவும் மின்னிலக்க வடிவில் வந்துசேர்ந்துள்ளது இந்தத் தகவல் பேழை.

கடந்த இருநூறு ஆண்டுகளில் தமிழ்ச் சமூகம் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பு, பேணிய பண்பாட்டு விழுமியங்கள், நாட்டிய செல்வாக்கு, சந்தித்த சறுக்கல்கள், நிகழ்த்திய சாதனைகள், கற்றுக்கொண்ட பாடங்கள், விட்டுச்சென்ற தனித்துவங்கள் என இந்நாள் வரையிலான தலைமுறையினரின் வாழ்க்கையை உள்ளடக்கிய மதிவளம்.

அமைப்புகள், தனிமனிதர்கள், நிகழ்வுகள், தரவுகள், புள்ளிவிவரங்கள் போன்றவை அடங்கிய தொகுப்பாக மட்டுமன்றி,  தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் அறிவுப்பேழையாக இந்த மின்னூல் விளங்குகிறது.

நிலத்தை அகழாய்வு செய்து தமிழனத்தின் தொன்மை நிலைநாட்டப்பட்டு வரும் வேளையில், சிங்கப்பூர்த் தமிழனத்தின் வரலாற்றை அறிவார்ந்து ஆய்வுசெய்து ஆவணப்படுத்தியுள்ள இப்பெருமுயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது, பெரிதும் வரவேற்கத்தக்கது. 

இருநூறு ஆண்டுகால வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்க எத்தனை நாள்கள் தேவைப்படும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அவ்வகையில் முடிந்துபோன நிகழ்வுகளுக்கு மீண்டும் வடிவம் கொடுத்து, அவற்றை எப்போதும் புரட்டிப் பார்க்க உதவும் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம், சிங்கப்பூர்த் தமிழர் வரலாறு குறித்து அறிந்துகொள்ள விரும்புவோர்க்கு ஊற்றுக்கண்ணாகவும் விளங்கவுள்ளது.

வரலாற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு சமூகமாக ஒன்றிணைந்தால் எதனையும் சாதிக்கலாம் எனும் உயரிய நோக்கத்தின் வலிமைக்குமான ஒட்டுமொத்த வெளிப்பாடாகத் திகழ்கிறது இந்த மின்னிலக்க பேழை. 

நாட்டிற்குப் பெருமைசேர்த்த தமிழர்கள், வரலாற்றுப் பொன்னேட்டில் தங்கள் பெயர் பொறித்த தலைவர்கள், அரசியல், மொழி, உணவு, பரவலாகக் காணப்பட்டு பிறகு அருகிப் போன தமிழ் மக்களின் வாழ்க்கைத் தொழில்கள், தமிழர்கள் கோலோச்சிய விளையாட்டுத் துறை, கலையுலகில் அவர்கள் முன்னெடுத்து நிகழ்த்திக் காட்டிய புதுமைகள்  உள்ளிட்ட பலவற்றைக் குறித்தும் காட்சிப்படுத்துகிறது ‘சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்’.

சமூகம் வாழ்ந்த கதை, வீழ்ந்த தருணம், ஆளுமைகள், அதிபர்கள் வென்ற வரலாறு, சாதித்த தமிழனம் என  அடிமட்டநிலையிலிருந்து அரசியல் அரியணைவரை மின்புதையலாகக் கண்முன் நிற்கும் காலப் பெட்டகம்,  தமிழரல்லாத இதயங்களும் தங்கள் சக இனத்தின் நற்பயணத்துக்காக ஒருசேரத் துடித்த விதத்திற்குச் சான்று பகிர்கின்றன.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் எண்ணத்தில் கருக்கொண்டது இந்தக் கலைக்களஞ்சியம். அவ்வெண்ணத்தின் பின்னணியை அறிந்த மாத்திரத்தில் அதனை நனவாக்க இத்திட்டத்தில் இணைந்து முன்னணியில் நின்றது தேசிய நூலக வாரியம்.

இச்செய்தி குறித்த தகவல் எட்டியதும் எந்த வெகுமதியையும் எதிர்பாராது, சமூகத்தில் உள்ள பலர் தன்னார்வலர்களாக, அமைப்பாக, குழுவாகத் தங்கள் நேரத்தையும் வல்லமையையும் மதியுரையையும் பகிர்ந்துகொள்ள முன்வந்தனர்.

தமிழ் மக்கள் குறித்த தகவல்களைத் தொழில்நுட்ப மின்பலகைகளில் சிற்பமாக்கிய தமிழ் பேசா வல்லுநர் குழு இத்திட்டத்தில் இணைந்து செயலாற்றியது சிங்கப்பூரின் பல்லின நல்லிணக்கத்தின் சிறந்த வெளிப்பாடு.

கடந்த தலைமுறைகளின் கதைகளையும் அனுபவங்களையும் இக்காலத் தலைமுறைக்கும் எடுத்துச்சொல்வதன்வழி, அவற்றின்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களையும் பகுத்துக் காட்டியுள்ளது கலைக்களஞ்சியம்.

இது ஒரு புத்தம் புதிய படலம்; இதைக் கொண்டாடும் வேளையில், தமிழ், தமிழர் சார்ந்த அனைத்தையும் அழியாமல் பாதுகாத்து ஆவணப்படுத்தலை ஊக்குவிக்கும் முயற்சிகள் தொடர வேண்டும். அதற்குச் சமூகத்தின் பேராதரவும் ஊக்குவிப்பும் மிக மிக முக்கியம்.

பண்பாடு, மரபு, மொழி, இனம் போன்ற எல்லைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் அழியாப் பாலமாக இந்த அறிவுப்புதையல் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

இந்த அரும்பெரும் பணியில் தனிப்பயன் கருதாது, பொதுநலனை முன்னிறுத்தி கைகோத்த, கைகொடுத்த நல்லுள்ளங்களுக்குச் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கும்.

சிங்கப்பூர்த் தமிழர்க் கலைக்களஞ்சியம் கடந்த காலத்தைக் கூறும் ஆவணம் மட்டுமன்று. நாம் யார் என்பதைக் காலம் கடந்தும் சொல்லிக்கொண்டே இருக்கப்போகும் அடையாளப் பெட்டகம்!

குறிப்புச் சொற்கள்