முதல் முறையாகப் பாடாங்கில் மேடையேறும் ‘வசந்தம் பாய்ஸ்’ சகோதரர்கள்

2 mins read
d4e220d4-2431-4e69-a13c-be634fe988e8
‘வசந்தம் பாய்ஸ்’ இசைக்குழுவைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது நூர், முகமது பஷீர், முகமது ரஃபி.  - படம்: ஃபேஸ்புக் 

கடந்த 50 ஆண்டுகளுக்குமேல் சிங்கப்பூர் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கலைத்துறையில் முத்திரை பதித்து வருகின்றது புகழ்பெற்ற உள்ளூர் இசைக்குழுவான ‘வசந்தம் பாய்ஸ்’.

சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்களை ஒட்டி இக்குழுவைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது நூர், முகமது பஷீர், முகமது ரஃபி மூவரும் முதல் முறையாகப் பாடாங்கில் மேடையேறவுள்ளனர்.

இந்தத் தருணம், ‘வசந்தம் பாய்ஸ்’ இசைக்குழுவின் மற்ற உறுப்பினர்களையும் இதர சிங்கப்பூர் இந்திய இசைக்கலைஞர்களையும் பிரதிநிதிக்கும் வகையிலானது என்றார் பியானோ, கீபோர்டு கலைஞர் முகமது பஷீர், 61.

“தேசிய தினக் கொண்டாட்டங்கள் போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் உள்ளூர்த் திறனாளர்களை மேடையில் அதிகமாகப் பார்க்க விரும்புகிறேன்,” என்றார்.

இந்திய இசையில் மேற்கத்திய பாணிகளைப் புகுத்துவதில் பெயர் பெற்ற ‘வசந்தம் பாய்ஸ்’ இசைக்குழு இன்றுவரை மக்கள் நன்கு அறிந்த ஒரு பெயராகவே உள்ளது.

60ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூருடன் 50 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்துவரும் இசைப்பயணம் இரட்டிப்புக் கொண்டாட்டம் என்றார் தாள வாத்தியக் (டிரம்ஸ்) கலைஞர் முகமது நூர், 59.

“உள்ளூர் இசைத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. புதுமை, புத்தாக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க எப்போதும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்,” என்றார் அவர்.

இந்த ஆண்டின் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மூவரும் ‘முன்னேறு வாலிபா’ என்ற புகழ்பெற்ற தேசிய தினப் பாடலை மாறுபட்ட பாணியில் படைக்கவிருக்கின்றனர்.

1998ஆம் ஆண்டு தேசிய தினத்துக்கு வெளிவந்த இந்தப் பாடல் வரிகளை மெட்டுக்கேற்ப ஒழுங்குபடுத்தியதை நினைவுகூர்ந்தார் முகமது ரஃபி, 65.

“பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முயற்சி இன்று மீண்டும் உயிர்ப்பிக்கிறது என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது,” என்றார்.

மேம்படுத்தப்பட்ட இசை, தெளிவான வரிகளுடன் ‘முன்னேறு வாலிபா’ பாடல் இம்முறை ஒரு புதிய பரிமாணத்தில் மேடையேறும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ரஃபி.

“மற்ற இனங்களைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் இம்முறை பாடல் வரிகளை முழுமையாகப் புரிந்துகொண்டு அதன் பொருளைப் பாராட்டினர்,” என்றார்.

சிங்கப்பூர் சிறிய நாடாக இருந்தாலும் இங்குள்ள இந்திய இசைத்துறை இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்றும் இப்போது இளம் கலைஞர்களுக்குப் பாதைவகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“சிங்கப்பூரில் பிறந்து, வளர்ந்து, இசைத் துறையில் பல பாதைகளைக் கடந்து வந்துள்ளோம். இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கான எங்கள் சமர்ப்பணம்,” என்றார் ரஃபி.

குறிப்புச் சொற்கள்