கம்போடியாவில் நடைபெறும் ‘கடாரம் கொண்டான்’ மாநாட்டில் சிங்கப்பூரிலிருந்து 20 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொள்கின்றனர்.
சோழப் பேரரசன் இராசேந்திர சோழன் கடாரத்தை (தற்போதைய மலேசியாவின் கெடா) வென்ற ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.
1025ஆம் ஆண்டு கப்பல் படையுடன் வந்த இராசேந்திர சோழன் ஸ்ரீவிஜயப் பேரரசை வீழ்த்தி, கடாரத்தையும் தென்கிழக்காசியா முழுவதையும் வெற்றிகொண்டார்.
அந்த வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு கம்போடியா அங்கோர் வாட் தமிழ்ச் சங்கமும் சீனு ஞானம் டிராவல்ஸ் நிறுவனமும் இணைந்து நவம்பர் 21 முதல் 26ஆம் தேதி வரை சியம் ரீப் நகரில் பேரளவில் மாநாட்டை நடத்துகின்றன.
அங்கோர் வாட் தமிழ்ச் சங்கத் தலைவர் த.சீனிவாசராவும் சீனு ஞானம் டிராவல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆர். ஞானசேகரனும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மேனாள் தலைவர் நா.ஆண்டியப்பன் ஏற்பாட்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த 20 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வெள்ளிக்கிழமை சியம் ரீப் புறப்படுகின்றனர்.
மாநாட்டில் ‘இராசேந்திர சோழன் படையெடுப்பும் சிங்கப்பூர்க் கல்லும்’ என்னும் தலைப்பில் திரு ஆண்டியப்பன் கட்டுரை படைக்கிறார்.
இந்திய வரலாற்றில் இதுவரை எவரும் செய்யாத சாதனையை நிகழ்த்தி கடல்கடந்து பல நாடுகளை வென்ற மாமன்னன் முதலாம் இராசேந்திர சோழன், தந்தையை விஞ்சிய தனயனாக உலக அளவில் தமிழரின் பெருமையை நிலைநாட்டியவர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த வகையில், ‘கடாரம் கொண்டான்’ அனைத்துலக மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 22, 23 என இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டிற்குப் பிறகு நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் மாநாட்டுக் குழுவினர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அங்கோர் வாட், தா புரோம், பேயோன், ஆயிரம் லிங்கங்கள் உள்ள நாம் குல்லென் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குப் பேராளர்கள் செல்லவுள்ளனர். மாநாட்டையும் சுற்றுலாவையும் முடித்துக்கொண்டு சிங்கப்பூர்க் குழுவினர் நவம்பர் 26ஆம் தேதி நாடு திரும்புவர்.

