திருக்குறள்களைப் பலதரப்பு மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் ‘குறள் ஃபோர்ஆல்’ (#KURAL4ALL) எனும் ‘அனைவருக்கும் குறள்’ இயக்கத்தின் ஆறாம் ஆண்டு, சுவா சூ காங் நூலகத்தில் கொண்டாடப்பட்டது.
சமூக ஊடகங்களில் இயங்கி வரும் இந்த இயக்கம் சமூக ஊடகப் பக்கத்தில் திருக்குறளை ஒட்டிய பல்வேறு பொதுமக்கள் படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. திருக்குறள் பாக்களின் எளிய விளக்கங்கள், சிற்றுரைக் காணொளிகள் உள்ளிட்டவை அதில் இடம்பெறுகின்றன.
ஆர்வலர் குழுவாகச் செயல்படும் இந்த இயக்கம், பொது நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
ஜூன் 14ஆம் தேதி மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 49 பேர் வந்திருந்தனர். குறளோடு விளையாடு ஆகிய முயற்சிகளைத் தொடங்கி வைத்த கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட ஆர்வலர்கள் சிலர், தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பகிர்ந்தனர்.
நிகழ்ச்சியின் முதல் அங்கமாக, திரு பிரம்ம குமார் நடத்திய கேள்வி, பதில் அங்கம் இடம்பெற்றது. தொடர்ந்து அன்றைய சிறப்பு நிகழ்வான கருத்தரங்கம் லிஷா இலக்கிய மன்றத்தின் தலைவர் கண்ணன் சேஷாத்ரி தலைமையில் தொடங்கியது.
திருக்குறளின் முக்கியத்துவத்தையும் அது ஒவ்வொரு வீட்டிலும் அது போதிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் திரு கண்ணன் விளக்கினார். திருக்குறளுக்கும் மற்ற பல்வேறு இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பையும் அவர் விளக்கினார்.
பாடல்களைப் பிள்ளைகள் பாட அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவர் அதற்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இதில் திரு இசக்கி பாண்டியன், அவரது மகன் மதியன், ஜோஷ்னா, ஜஷ்வந்த், யுவேஷ் பிரசாத், வேலாயுதம் தேவி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் திருக்குறளும் காலமும்” என்ற தலைப்பில் ஹேமா சுவாமிநாதனின் உரையும் இடம்பெற்றது. அத்துடன், திருக்குறள் நாடகம் என, திருக்குறளை ஒட்டி இடம்பெற்ற பல்வேறு அங்கங்களில் குடும்பங்கள் பல ஒன்றிணைந்து அர்த்தமிகு கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.