நான்கு மொழிகளிலும் சமரசத் தொண்டு

3 mins read
224a3d5a-ed52-45ff-b108-e72963c27089
2025 ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு விருது விழாவில் ‘எம்எஸ்எஃப் (MSF) தோழர்’ விருது பெற்ற திரு ராமச்சந்திரன். - படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

சமரச அதிகாரியாகத் தொண்டாற்றி வரும் திரு ராமச்சந்திரன், 70, ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் ஆகிய நான்கு மொழிகளிலும் சமரச அமர்வுகளை நடத்தி வருகிறார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமரச அதிகாரியாகச் சேவையாற்றி வருகிறார் இவர்.

சமூக சமரச நிலையத்தில் தொடங்கி, கடந்த 13 ஆண்டுகளாகப் பெற்றோர் பராமரிப்புக்கான நடுவர் மன்றத்தில் தொண்டாற்றிவரும் திரு ராமச்சந்திரன், பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான சிக்கல்களுக்குத் தீர்வுகாண உதவி வருகிறார்.

உணர்வுகளைக் கையாளுதல்

ஒருபுறம், “பிள்ளைகள் இருந்தும் பிள்ளைகள் இல்லாததுபோல் இருக்கிறது,” என்ற பெற்றோரின் மனக்குமுறல்களையும், மறுபுறம், “நான் வளரும்போது என்னைச் சரியாக கவனிக்கவில்லை,” என்ற பிள்ளைகளின் புகார்களையும் சமாளிப்பதே இவரது முக்கியப் பணி.

ஓய்வு பெற்ற பிறகு நிதியுதவியின்றி தவிக்கும் பெற்றோர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளையும் தகாத வார்த்தைகளால் தங்கள் பிள்ளைகளை வசைபாடும் பெற்றோர்களையும் கண்டு உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.

மனவலி அதிகம் இருக்கும் இடங்களில் கடுஞ்சொற்களுக்குப் பஞ்சமில்லை. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளிலும் பொறுமையாக அவர்களைக் கையாளும் திறன் திரு ராமச்சந்திரனின் பணியில் இன்றியமையாததாக விளங்குகிறது.

“விவாதம் சூடுபிடிக்கும் நேரங்களில், ஆலோசனை வழங்கச் சொல்லி என்னைப் பல நேரங்களில் வற்புறுத்துவர். நான் ஆலோசகர் இல்லை, நடுவிலிருந்து கேள்விகள் கேட்பது மட்டுமே என் பணி என்று அவர்களுக்குப் புரிய வைப்பேன்,” என்றார் திரு ராமச்சந்திரன்.

விவாதங்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டும்போது, ஒவ்வொரு தரப்பிடமும் தனிப்பட்ட முறையில் பேசி, பொறுமையாக இருக்கச் சொல்லி, சிக்கலைப் புரிந்துகொள்ள முயல்வார் இவர்.

ஒவ்வொரு பிள்ளையிடமும் அவரால் பெற்றோருக்குக் கொடுக்க முடியும் தொகை என்னவென்று கேட்டு, அதற்கு ஏற்றவாறு ஒரு நியாயமான முறையில் கலந்துரையாடலை இவர் வழிநடத்துவார்.

ஏழு பிள்ளைகள் உட்பட மொத்தம் ஒன்பது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து ஆகப் பெரிய சமரச அமர்வை நடத்திய அனுபவமும் இவருக்கு உண்டு.

வெளியே தகாத முறையில் பேசும் பல குடும்பங்களை அமைதியாக இருக்கச் செய்துள்ள தம் பணியைக் கண்டு பலரும் வியந்தது உண்டு என்று திரு ராமச்சந்திரன் சொன்னார்.

நான்கு மொழி புழக்கம்

பெரும்பாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பணியாற்றி இருந்தாலும், மலாயிலும் ஹொக்கியன் என்ற சீன வட்டார மொழியிலும் சமரச அமர்வுகளைத் திரு ராமச்சந்திரன் நடத்தியுள்ளார்.

தன் ஒன்றரை வயதில் தாயை இழந்த பிறகு எட்டு வயது வரை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த திரு ராமச்சந்திரன் ஹொக்கியன் மொழியை மட்டுமே கற்றுக்கொண்டார்.

தமிழ் பேசுவதற்கான வாய்ப்பே கிடைக்காததால், தம்மைப் பார்க்க வரும்போது தம் தந்தை பேசும் தமிழைக்கூட புரிந்துகொள்ள முடியாமல் முழித்த எட்டு வயது ராமச்சந்திரனை அவர் நினைவுகூர்ந்தார்.

இருப்பினும், ‘தமிழனாக இருந்தும் தமிழ் தெரியாதா’ என்ற கேள்வி எழுந்த நேரத்தில், விடாமுயற்சியோடு இவர் தமிழ் கற்றுக்கொண்டார்.

இன்று சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும், குடும்பத்தினர், அண்டைவீட்டார், ஊழியர்கள், நண்பர்கள் எனப் பலதரப்பட்ட மக்களுக்கு இடையிலான பிணக்குகளுக்குத் தீர்வுகண்டுள்ள 25 ஆண்டு அனுபவம் திரு ராமச்சந்திரனுக்கு உண்டு.

அடுத்த தலைமுறைக்குப் பயிற்சி

கடந்த ஈராண்டுகளாகச் சமூக சமரச நிலையத்தில் மக்கள் கழகத்தின் அடித்தளத் தலைவர்களைச் சமரச அதிகாரிகளாக்க பயிற்சியும் அளித்து வருகிறார் திரு ராமச்சந்திரன்.

“எந்த நிலையிலும் ஒருதரப்பினரை ஆதரித்துப் பேசுகிறோம் என்ற எண்ணம் மற்றொரு தரப்பிற்கு ஏற்படக்கூடாது. அவ்வாறு ஏற்பட்டால், அங்கு நமக்கான மதிப்பு குறைவதோடு தேவையில்லாத கருத்து வேற்றுமையும் ஏற்படும்,” என்கிறார் இவர்.

தொடக்கத்தில் பலரும் ஆலோசனை வழங்கத் தொடங்கிவிடுவர் என்பதால், நடுநிலையிலிருந்து மட்டுமே பேச வேண்டும் என்ற கருத்தை இவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

அத்துடன், பெற்றோர் பராமரிப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆய்வுக்குழுக் கலந்துரையாடலில் தன் எண்ணங்களையும் அனுபவத்தையும் திரு ராமச்சந்திரன் பகிர்ந்துகொண்டார் .

மேலும், பெற்றோர் பராமரிப்புச் சட்டத்தை மூத்தோருக்கு ஏற்றதாக மாற்றியமைக்க திரு ராமச்சந்திரனின் கருத்துகள் அவர்களுக்குப் பெரிதும் உதவின.

அளப்பரிய சமூகத் தொண்டு

இவ்வாண்டு ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு விருது விழாவில் இவர் ‘எம்எஸ்எஃப் (MSF) தோழர்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். அவர் இவ்விருதைப் பெற்றது இது மூன்றாம் முறை.

“சமூகத் தொண்டு என் ரத்தத்தில் மட்டுமன்றி எலும்பிலும் பிணைந்துள்ளது,” எனக் கூறும் திரு ராமச்சந்திரன், பணத்தாலும் எந்தவொரு பொருளாலும் தரமுடியாத மகிழ்ச்சியை சமூகத் தொண்டு தமக்குத் தருவதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்