மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவனின் ஒவ்வொரு வாழ்வியல் கட்டத்துக்கும் குரலும் உயிரும் கொடுக்கிறது நாட்டுப்புற இசை. அத்தகைய இசையைக் கிராமிய மண்வாசனையோடும் சிங்கப்பூர் நினைவோடும் மேடையேற்றுகிறது இவ்வாண்டின் ஆனந்த கொண்டாட்டம்.
ஆட்டம் அமைப்பின் ஏற்பாட்டில் உருவாகியுள்ள இந்திய மரபுக்கலைகளின் சங்கமமான ஆனந்த கொண்டாட்டம் இரண்டாவது முறையாக 29, 30 ஆகஸ்ட் தேதிகளில் எஸ்பிளனேட்டில் அரங்கேற உள்ளது. முழுக்க முழுக்க நேரடி இசையோடு அமைந்துள்ள இவ்விழாவின் தமிழ்ப் பாடல்கள் அனைத்தும் சுய தயாரிப்புகள். புது வரிகள், புதிதாக அமைக்கப்பட்ட இசை. அவற்றை அமைப்பு முன்னோட்டமாக வெளியிட்டுள்ளது.
பல நுணுக்கங்கள் வாய்ந்த நாட்டுப்புற இசை எளிய மக்களின் வாழ்வியலையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் உள்ளடக்கி மனதை கவர்ந்திழுப்பவை என, பாடகர்கள் கே. சுகந்தி, அ. ராமைய்யா இருவரும் நாட்டுப்புற இசையின் தொன்மையினை விளக்கினர். சோகம், காதல் இன்பம், நம்பிக்கை, இயற்கையின் மாண்பு என பல்வேறு உணர்வுகளைத் தூண்டும் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடியேறி வந்த சிங்கப்பூர் மக்கள், அவர்களை ஒன்றிணைக்கும் நல்லிணக்கம் ஆகியவற்றையும் நேர்த்தியாக பாடுகின்றன, பாடலாசிரியர் விவேக் பாரதியின் வரிகள்.
தமிழரின் அரிய சொத்தாக நாட்டுப்புற இசையைக் கருதும் இசையமைப்பாளர் பால் ஜேக்கப் அந்த பாணிக்கு அறிமுகமானது இருபது ஆண்டுகளுக்கு முன். மேடையிலோ திரையிலோ மட்டுமின்றி, வீதியிலும் வீடுகளிலும் இளையர் கூடும் இடங்களிலும்கூட இவ்விசை ஒலிக்கவேண்டும், எழுந்து நின்று ஆட வைக்கவேண்டும் எனும் நோக்கில் இசையமைத்துளதாக அவர் கூறினார்.
துடும்பு, பறை, உருட்டு, தவில், நாதஸ்வரம் என பல்வேறு மண்ணிசை வாத்தியங்களோடு இப்பாடல்களை அவர் அமைத்துள்ளார். அவற்றோடு சீன, மலாய் தாளவாத்தியங்களும் தனித்துவ பாணியில் சுவையூட்டுகின்றன.
“இனம், மொழி என நாங்கள் வேறுபட்டிருந்தாலும், எங்களை இணைத்தது இந்த இசை. ஒரே மேடையில் இருக்கும்போது கண்ணாலேயே பேசி நாங்கள் இசையில் இணைவதை வார்த்தையால் கூறமுடியாது,” என்றார் பறை இசைக் கலைஞர் கபில்தேவா.
இசை விருந்தாக தயாராகியுள்ள இப்பாடல்களைக் கேட்க: https://www.youtube.com/playlist?list=PLAe8uzmHautnvYAXKIVQUqM8l1CgU56pi