நடிகர் விஷால் திரைத்துறைக்கு அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் விஷால் நடித்த முதல் படம் ‘செல்லமே’.
இதுகுறித்து தமது ‘எக்ஸ்’ தளத்தில் காணொளி ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.
“கடந்த 21 ஆண்டுகளாக நான் மட்டுமன்றி என் குடும்பமும் மூன்று வேளை சாப்பிடும் நிம்மதியான உணவுக்கும் நானும் பலருக்கு உணவளிப்பதற்குமான உறுதி கொடுத்தது ரசிகர்களாகிய நீங்கள்தான்.
“உங்களின் அன்பும் ஆதரவும் நம்பிக்கையும்தான் என்னுடைய திரைவாழ்க்கையில் 21 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கழிக்க உதவியது. முதல் படம் முதல் இப்போதுவரை எனக்கான அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்.
“இந்தப் பயணம் என்னுடைய வெற்றி அன்று நம்முடைய வெற்றி,” என விஷால் தமது பதிவில் கூறியிருந்தார்.
மேலும், “நான் திசை மாறிப் போகும்பொழுது சரியாக வழிகாட்டிய செய்தியாளர்களான என் ஆசிரியர்களுக்கும் நன்றி,” எனவும் தெரிவித்திருக்கிறார்.

