நடிகர் தனுஷ் அற்புதமான நடிகர், நல்ல மனிதர் என்று கூறியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இருவரும் ‘குபேரா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனுஷ் குறித்து நீண்ட பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா.
அதில், ‘குபேரா’வுக்காக ஒவ்வொரு நாளும் தனுஷ் மிகக் கடினமாக உழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் இருவரும் வெவ்வேறு நகரங்களில், வெவ்வேறு வேலைகளில் இருக்கும்போது ஓய்வு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறோம். ஆனால் அந்த ஓய்வை நம்மால் பெறமுடியாது என்பதை அறிவோம்.
“மேலும் ‘குபேரா’வில் மட்டுமல்ல, எல்லா படத்திலும் அற்புதமான நடிப்பை வழங்கியதற்கு நன்றி. என்னிடம் மட்டுமல்ல, உங்களுடன் பழகிய அனைவருடனும் அன்பாக இருந்தீர்கள்.
“படப்பிடிப்புத் தளத்தில் நீங்கள் எனக்கு எத்தனை லட்டுகள் கொடுத்தீர்கள் என்பது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. எப்போதும் அதை மறக்கமாட்டேன்,” என்று ராஷ்மிகா மந்தனா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பின்போது இவருக்கு தமிழில் வசனங்களைப் பேசக் கற்றுக் கொடுத்தது தனுஷ்தானாம். ராஷ்மிகா சரியாக நடித்துவிட்டால் உடனே பாராட்டுவாராம்.
“அவை அனைத்துமே அற்புதமான அனுபவம். இது அனைத்தும் சாதாரண விஷயங்களாக உங்களுக்குத் தோன்றலாம். இப்போது மட்டுமல்ல, எப்போதும் உங்களுக்கு எல்லா நல்ல விஷயங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்,” என மேலும் குறிப்பிட்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி, ஜூன் 20ஆம் தேதி வெளியானது ‘குபேரா’ படம்.
தெலுங்கிலும் தமிழிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகம் எனத் தயாரிப்புத் தரப்பு மகிழ்ச்சியில் உள்ளதாகத் தகவல்.