‘தலைவர் 173’ல் இருந்து சுந்தர் சி விலகினார்

3 mins read
ab9160bf-ffa6-4d1c-ae52-17d78bb0dc56
‘தலைவர் 173’ படம் பற்றி அறிவித்தபோது ரஜினி, கமல், சுந்தர் சி எடுத்துக்கொண்ட படம். - படம்: இந்திய ஊடகம்

‘தலைவர் 173’ படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்க, சுந்தர் சி இயக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ செய்தி வெளியான ஒருசில நாள்களில் சுந்தர் சி படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததுதான் தற்பொழுது கோலிவுட் திரையுலகில் பேசு பொருளாகி உள்ளது.

ரஜினிகாந்தின் 173வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் அதை சுந்தர் சி இயக்குவதாகவும் நவம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சுந்தர் சி இயக்கிய ‘அருணாச்சலம்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதால், இந்த கூட்டணியால் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர்.

திடீரென சுந்தர் சி வெளியிட்ட அறிக்கையில், “தவிர்க்க முடியாத காரணங்களால் ‘தலைவர் 173’ படத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி சாரை இயக்குவது என்பது என் சினிமா வாழ்வின் பெரிய கனவு. ஆனால், சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த எல்லாமும் நடந்துவிடுவதில்லை. கடந்த சில நாள்களாக இப்படம் குறித்து நாங்கள் மூவரும் பேசிக்கொண்டது என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம்,” என்று பதிவிட்டு விலகினார்.

ரஜினி படத்தை இயக்கப் பல இயக்குநர்கள் தவம் கிடக்கும்போது, சுந்தர் சி விலகியதற்கான காரணம் என்ன என்பது சமூக வலைத்தளங்களில் பெரும் ஆச்சரியத்தையும் மனக்கசப்பு என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய கமல், செய்தியாளர்களிடம் இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

அதில், “விலகியதற்கான காரணத்தை சுந்தர் சி தெளிவாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். நான் படத்தின் தயாரிப்பாளர். என்னுடைய நட்சத்திரத்திற்குப் பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது.

“ரஜினிக்கு கதை பிடிக்கும் வரை அனைவரிடமும் கதை கேட்டுக்கொண்டே இருப்போம். புதிய இயக்குநராக இருந்தாலும் அவர்களிடமும் கதை கேட்போம். ஆனால், கதை நன்றாக இருக்க வேண்டும். எதிர்பாராததை எதிர்பாருங்கள்,” என்று கமல் தெளிவாகப் பேசி உள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாகப் பேசிய வலைப்பேச்சு பிஸ்மி, “முன்னதாக, ‘ஜெயிலர்’ படத்துக்குப் பின் ரஜினி நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்க, கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்த படம், ‘கூலி’ சரியாக வராததால் லோகேஷ் கனகராஜை சூப்பர் ஸ்டார் நீக்கினார்.

“2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ரஜினியின் கால்ஷீட் இருப்பதால், உடனடியாக ஓர் இயக்குநரை ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரஜினி ஒரு கலகலப்பான படம் பண்ண வேண்டும் என ஆசைப்பட, ரஜினி, கமலின் தேர்வாக சுந்தர் சி இருந்தார்.

“சுந்தர் சிக்கு இந்த இரண்டு வாய்ப்புகளும் (அருணாச்சலம், தலைவர் 173) கஷ்டப்படாமல் தானாக அமைந்தவை.

‘அருணாச்சலம்’ வாய்ப்புகூட அப்போது குஷ்புவுடன் காதலில் இருந்ததால் அவரின் வற்புறுத்தலின் பேரில் சுந்தர் சிக்கு கிடைத்தது. மற்ற இயக்குநர்கள் போராடி ரஜினி பட வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆனால், சுந்தர் சிக்கு இது எளிதாகக் கிடைத்ததால் அதன் அருமை தெரியவில்லை,” என்று விமர்சித்துள்ளார்.

இதற்குப் பதிலடியாக, ‘இவ்வளவு பெரிய படத்தில் இருந்து விலகுகிறார் என்றால் அவர் தரப்பிலும் நியாயம் இருக்கும்’ என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்