விஜய்க்குக் கட்சி தொடங்க மனவுறுதி அளித்தது இதுதான்: நிகழ்வைப் பகிர்ந்த பார்த்திபன்

1 mins read
a2321349-5981-4be2-8348-9c899f7bc38a
‘கல்யாணசுந்தரம்’ படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம். - படம்: ஊடகம்

பன்முகக் கலைஞரான பார்த்திபன் சமூக ஊடகங்களில் தன்னுடைய கருத்துகளை அவ்வப்போது பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.

தம் வாழ்வில் நடந்த சம்பவங்களைப் பதிவுகளின் மூலம் இணையவாசிகளுடன் அவர் பகிர்ந்துகொள்வார்.

அவ்வகையில், திரைப்படப் பூசையொன்றில் 10 ஜோடிகளுக்குத் தம் சொந்தச் செலவில் திருமணம் செய்து வைத்ததாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக வெளியான அந்தப் பதிவில், ‘கல்யாணசுந்தரம்’ படத்திற்கான பூசையின்போது 10 ஜோடிகளுக்குத் தம் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, பெட்டி, படுக்கை என அனைத்து சீர்வரிசைப் பொருள்களையும் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

மேலும், படப்பூசைகளைப் பயனுள்ளதாக மாற்றுவதற்காகத்தான் தொடங்கிய திட்டம் தற்போது பலரால் பின்பற்றப்பட்டு வருவதாகவும் சொன்னார்.

“என் தலைமையில் நடிகர் விஜய் 16 ஜோடிகளுக்குத் திருமணம் செய்துவைத்தார்.

“அப்போது மேடையில் பேசும்போது, திருமணம் செய்துவைத்து புண்ணியம் சேர்த்துக்கொள்ளும் விஜய்தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனக் கூறினேன்,” என்றார் பார்த்திபன்.

மக்களுக்கு உதவியாக நிறைய நல்ல செயல்களில் ஈடுபட்டதால்தான் கட்சியைத் தொடங்கும் தைரியம் விஜய்க்கு வந்தது என்றும் அவர் கூறினார்.

யாரோ ஒருவர் அனுப்பிய புகைப்படத்தைக் கண்டதால் அந்தப் பழைய சம்பவங்கள் தமக்கு நினைவுக்கு வந்ததாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்