நடிகர் விஷாலும் நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வந்தது அண்மையில்தான் தெரியவந்தது.
இந்நிலையில், விஷால் தனது 48வது பிறந்தநாளை சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) கொண்டாடினார். அதே நாளில் அவரது நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எப்போது எனக்குத் திருமணம் எனக் காத்திருந்த மக்களுக்கு விரைவில் நல்ல செய்தியை அறிவிப்பேன். இந்த ஆண்டு இறுதிக்குள் என் திருமணம் நடக்கும்,” என்றார்.
“நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி ஐம்பது ஆண்டுகளைக் கடந்துள்ளார். இதைப் பாராட்டி, நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு விழா நடத்தப்படுமா? என்று விஷாலிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த விஷால், “ஒருவர் 50 ஆண்டுகள் திரையுலகில் நீடித்து, அதுவும் சூப்பர் ஸ்டாராகவே தொடர்வது என்பதை உலக சாதனையாகவே நான் பார்க்கிறேன்.
“தற்போது நடிகர் சங்க கட்டட வேலைகள் நடந்து வருவதால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதேநேரம் ரஜினிக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற உணர்வும் உள்ளது. விழா தொடர்பாகப் பரிசீலித்து வருகிறோம்,” என்றார்.