தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்களுக்குப் பிடித்தமானதைச் செய்ய வேண்டும்: பாக்யராஜ்

2 mins read
fb23c894-92f6-4b37-bcab-5e7872f06dcf
‘கயிலன்’ படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  - படம்: ஊடகம்

திரைக் கலைஞர்கள் மக்களுக்குப் பிடித்தமானதைச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என இயக்குநர் கே.பாக்யராஜ் கூறினார்.

அரசகுமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கயிலன்’. அருள் அஜித் இயக்கியுள்ள இப்படத்தில் ஷிவா, ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பாக்யராஜ், தமிழ்த் திரையுலகில் பிறமொழிப் பயன்பாடு குறித்து தன் கருத்துகளை முன்வைத்தார்.

“திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைப்பதை பற்றி இப்போது அதிகம் பேசுகிறார்கள். என்னுடைய படங்களைப் பற்றி யோசித்தேன்.

“ஒரு படத்திற்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு ஒரு படத்தில் ‘டாடி டாடி’ என்ற பாடலையும் வைத்திருந்தேன். அத்துடன் ‘பேட்டா பேட்டா மேரா பேட்டா’ என்ற இந்தி வரியையும் பயன்படுத்தினேன்.

“இதெல்லாம் ஏன் என்றால் சினிமா மக்களுக்கானது. மக்களுக்குப் பிடித்தமானதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கம்தான். அதைத் தவிர்த்து, தமிழுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல. எங்களுக்குத் தமிழ்தான் சோறு போடுகிறது.

“நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். அந்த வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அந்தப் படத்தின் இயக்குநரை மனதாரப் பாராட்டுகிறேன்,” என்றார் பாக்யராஜ்.

இந்தப் படத்தின் பெயர் ‘கயிலன்’ என்று சொன்னவுடன் மீண்டும் ஒருமுறை தமிழைப் படிக்க வேண்டும் என்று தோன்றியதாகக் குறிப்பிட்ட அவர், முன்னோட்டக் காட்சிகளின் சாராம்சம் என்னவென்றால் போராட்டம்தான் என்றார்.

குறிப்புச் சொற்கள்