விருதுகள், மானியங்களை விரைந்து வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் வழி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசு, தமிழ் திரைப்படத் துறைக்கு, நிலுவையில் உள்ள ஏழு ஆண்டுகளுக்கான விருதுகளையும் திரைப்படங்களுக்கான மானியத்தையும் விரைவில் வழங்கி, திரைப்படத் துறையும் வளர்ச்சி அடைய உதவுமாறு அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் ஐந்து மாதங்கள் முடிந்த நிலையில், 2023, 2024 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் விருதுகள், மானியத்திற்கான அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
இதேபோல், 2016 முதல் 2022 ஆண்டு வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு திரைப்படங்களும் அரசு உருவாக்கிய குழுக்குள் மூலம் பார்க்கப்பட்டன.
ஆனால், இந்த ஏழு ஆண்டுகளுக்கான விருதுகளும் மானியங்களும்கூட இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
இதைச் சுட்டியுள்ள தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்படத் துறையைச் சார்ந்த பல கலைஞர்களும் தயாரிப்பாளர்களும் தமிழக அரசின் விருதுகளுக்காகவும் அரசு வழங்கும் மானியத்திற்காகவும் பல ஆண்டுகளாகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 8%-இல் இருந்து 4 விழுக்காடாகக் குறைத்து, தமிழ்த் திரைப்படங்களின் வளர்ச்சிக்கு உதவியதற்கு தமிழக அரசுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

