விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படத்தின் இறுதிப்பகுதி (கிளைமாக்ஸ்) மாற்றப்பட்டுள்ளது.
ரசிகர்கள் பலர் ஏற்கெனவே உள்ள இறுதிக்காட்சிகள் நன்றாக இல்லை எனக் கருத்து தெரிவித்து இருந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக படத்தின் நாயகனான விஷ்ணு விஷால் கூறியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்.
“நான் நடித்த ‘எஃப்ஐஆர்’, ‘கட்டாகுஸ்தி’ படங்களின் வரிசையில், ‘ஆர்யன்’ பட வெற்றியும் மகிழ்ச்சி அளிக்கிறது.
“ரசிகர்களின் உணர்வுகளை மதித்து, ‘ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் பகுதியை மாற்றுகிறேன். அனைத்து மொழிப் பதிப்பில் இந்த மாற்றம் செய்யப்படும்.
“இவ்வாறு ஒரு நிலைமை ஏற்படக்கூடும் என யோசித்து, இன்னொரு கிளைமாக்ஸ் பகுதியைப் படமாக்கி வைத்திருந்தோம். தற்போது அது படத்துடன் இணைக்கப்படும். ஒரு தயாரிப்பாளராகவும் தொடர் வெற்றி உற்சாகம் அளிக்கிறது.
“அடுத்து ‘இரண்டு வானம்’, ‘கட்டாகுஸ்தி-2’, அருண் காமராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளேன். ‘ஆர்யன்’ படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்தது கூடுதல் பலம். ஷ்ரத்தாவை அதிர்ஷ்ட நாயகி எனலாம். அந்த வகையில் அவரும் மற்றொரு பலமாக இருந்தார்,” என்று கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.

