இயக்குநர் மணிகண்டனும் விஜய் சேதுபதியும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். ஆனால் இம்முறை இருவரும் இணையத் தொடருக்காக இணைந்துள்ளனர் என்பதுதான் ஆச்சரியத் தகவல்.
‘ஆண்டவன் கட்டளை’, ‘விவசாயி’ போன்ற தரமான படங்களைத் தந்தவர் இயக்குநர் மணிகண்டன். இவர் அடுத்து இயக்கும் இணையத்தொடருக்கு ‘முத்து என்கிற காட்டான்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தயாரிப்புத் தரப்பில் அதிகாரபூர்வ சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இது கிராமத்துப் பின்னணியில், பெரும் பொருட்செலவில் உருவாகும் தொடராம். பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரஃப், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். தொடரை இயக்குவதுடன் தயாரிப்பதும் மணிகண்டன் தானாம்.
இந்தத் தொடரிலும் விஜய் சேதுபதி முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல். ஆனால், தொடர் வெளியாகும் வரை இதுகுறித்து எந்தத் தகவலும் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் உள்ளதாம் இயக்குநர் மணிகண்டன் தரப்பு.

