தமிழ் திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கி நயன்தாராவை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நயன்தாரா செவ்வாய்க்கிழமை தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்த நிலையில், விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவிக்கு (Black Badge spectre) என்ற உயர்தர சொகுசு காரை பரிசாக அளித்து இருக்கிறார்.
அந்தக் காரின் முன்னால் தன் மனைவி, மகன்களுடன் நின்று படம் பிடித்து அதைத் தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துகள் என் உயிர், நீ பிறந்த தினம் வரம், உன்னை உண்மையாகவே, வெறித்தனமாக, ஆழமாக நேசிக்கிறேன்.
“என் அழகியே உன்னை நேசிக்கிறேன். மகன்களுடன் உன்னை ஆழமாக நேசிக்கிறேன். அழகான வாழ்க்கையைத் தந்த உனக்கு என் நன்றி,” என்று பகிர்ந்திருக்கிறார்.
காதல் மனைவி நயன்தாராவிற்கு அவர் பரிசாக அளித்து இருக்கும் காரின் விலை, Rs.9.97 கோடி ஆகும். இந்த காரின் விலையைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் வாயைப் பிளந்துள்ளனர்.
நயன்தாராவின் பிறந்தநாளை மேலும் சிறப்பிக்க, தயாரிப்பு நிறுவனமான விருத்தி சினிமாசும் ஒரு சிறப்பான பரிசை வழங்கியது.
நந்தமூரி பாலகிருஷ்ணா - கோபிசந்த் மலினேனி இணையும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான ‘#NBK111’ல், நயன்தாரா கதாநாயகியாக ராணி வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.
தொடர்புடைய செய்திகள்
இது பாலகிருஷ்ணாவுடன் நயன்தாரா இணையும் நான்காவது படமாகும்.
இதற்கிடையில் நடிப்பைத் தாண்டி, நயன்தாரா ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் திகழ்கிறார்.
அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.200 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
அவர் தனது கணவருடன் இணைந்து ‘9Skin’ (சருமப் பராமரிப்பு) நிறுவனத்தைத் தொடங்கினார்.
மேலும், ‘Femi’9 (பெண்கள் ஆரோக்கியம்), ‘The Lip Balm Company’, ‘The Divine Food’s, ‘சாய் வாலே’ தேநீர் நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எண்ணெய் தொழிற்சாலை ஆகியவற்றிலும் முதலீடு செய்துள்ளார்.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து தொடங்கிய ‘ரௌடி பிக்ஸ்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மதிப்பு ரூ.50 கோடி எனக் கூறப்படுகிறது.
நயன்தாராவுக்குச் சென்னையில் ரூ.100 கோடி மதிப்புள்ள வீடு, ஹைதராபாத்தில் ரூ.30 கோடி மதிப்புள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.50 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானம் உள்பட பல ஆடம்பரச் சொத்துகள் உள்ளன.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டம், நயன்தாரா தனது சினிமா, வணிக உலகங்களில் அடைந்துள்ள பிரம்மாண்ட வெற்றியைப் பறைசாற்றியுள்ளது.

