சிம்பு நடிக்கும் படம் என்றால் ஏதாவது ஒரு வகையில் சிக்கல் வந்துவிடுகிறது. அவர் சமர்த்துப்பிள்ளையாக ஒதுங்கி நின்றாலும், சர்ச்சைகள் அவரை விட்டபாடில்லை.
இதோ ஒரு புதுச் சங்கதி.
வெற்றிமாறனும் சிம்புவும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளனர். இது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டது.
மேலும், சிம்புவுடன் வெற்றிமாறன் இணைவது குறித்து தெரியவந்ததும், தனக்கு 20 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட காப்புரிமையைத் தர இயலும் என தனுஷ் கறாராகக் கூறியதாக கடந்த இரு நாள்களாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவியது.
இந்நிலையில், தமக்கு தனுஷ் தரப்பிலிருந்து எக்காலத்திலும் தொல்லைகள் ஏதும் வராது என்றும் ஒருவர் காப்புரிமைக்காகப் பணம் கேட்பது சரியானதுதான் என்றும் கூறியுள்ளார் வெற்றிமாறன்.
“ஒருவேளை தனுஷ் என்னிடம் பணம் கேட்டிருந்தாலும் அதை எதிர்மறையாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான் சிம்புவைச் சந்தித்த மறுநாளே தனுஷிடம் பேசினேன்.
“சிம்புவுடனான புதுப் படத்தை ‘வடசென்னை’ கதாபாத்திரங்களுடன் இணைத்தும் எடுக்க முடியும், தனியாகவும் இதைப் படமாக உருவாக்க முடியும். ‘வடசென்னை’ படத்தின் காப்புரிமை உங்களிடம்தான் இருக்கிறது,” என்று கூறினேன்.
“அதற்கு சிம்பு, ‘உங்களுடைய எண்ணத்திற்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்யுங்கள். நான் என் குழுவிடம் பேசி காப்புரிமையைத் தந்துவிடுகிறேன். அதற்கு எனக்கு பணம் எதுவும் வேண்டாம்,’ என்று கூறிவிட்டார்,” என்று விளக்கம் அளித்துள்ளார் வெற்றிமாறன்.
தொடர்புடைய செய்திகள்
தமக்கும் தனுஷுக்குமான உறவு இப்படியொரு சம்பவத்தால் எளிதில் உடையக்கூடியது அல்ல என்றும் சிலர் தம்மையும் தனுஷையும் பற்றி யூடியூப் தளத்தில் பேசுவது பிடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“எனது எண்ணங்களுக்கு தனுஷ் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. அண்மையில் எனக்கு ஒரு பொருளியல் நெருக்கடி ஏற்பட்டபோது, ஒரு தயாரிப்பாளரிடம் முன்பணம் வாங்க தனுஷ்தான் உதவினார். அவர் தொந்தரவு செய்யமாட்டார்.
“சிம்புவுடன் நான் இணையும் செய்தியைச் சொன்னவுடன், ‘இது உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்’ எனக் கூறினார் தனுஷ்,” என்கிறார் வெற்றிமாறன்.