மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதிக்காகப் பாடல் எழுதிய பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு (செப்டம்பர் 5) இயற்கை எய்தினார். இவருக்கு வயது 90.
பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதையாசிரியர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் பூவை செங்குட்டுவன்.
1,000க்கும் மேலான திரைப்படப் பாடல்கள், 4,000க்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்கள் எனத் தனது திரை வாழ்க்கையில் 5,000க்கும் மேலான பாடல்களை எழுதிய பெருமை இவருக்கு உண்டு.
அத்துடன், திரைப்படங்கள், மேடை நாடகங்களுக்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகிய அனைத்தையும் எழுதும் திறன் கொண்டவர் இவர்.
‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை’, ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’, ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ உள்ளிட்ட பல முக்கியமான பக்திப் பாடல்களையும், சினிமா பாடல்களையும் இவர் எழுதியிருக்கிறார்.
‘வாழ்க்கை எனும் நேர்கோடு’ என்ற தலைப்பில் இவர் எழுதிய நூல் சில தினங்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது.
கலைமாமணி விருது, கண்ணதாசன் விருது, மகாகவி பாரதியார் விருது உள்ளிட்ட பல விருதுகளால் இவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
இவருக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். பூவை செங்குட்டுவன் தங்கையின் கணவர்தான் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன்.
தொடர்புடைய செய்திகள்
அறிஞர் அண்ணாவிற்கு ‘அறிஞர் அண்ணா ஆட்சிதானிது’ என்ற பாடலும் கலைஞர் கருணாநிதிக்கு ‘கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும்’ என்ற பாடலும் எம்.ஜி.ஆருக்காக ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை’ என்ற பாடலும் ஜெயலலிதாவிற்காக ஒரு பாடலும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

