தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கன்னடத்து பைங்கிளியின் பிரியாவிடை

3 mins read
60c1f62b-6b7e-4078-8da2-2cacc529310a
இளம் வயதில் சரோஜா தேவி. - படம்: singavarapu.wordpress.com / இணையம்
multi-img1 of 3

பெங்களூர்: பழம்பெரும் நடிகை ‘பத்மஸ்ரீ’ சரோஜா தேவி காலமானார்; அவருக்கு வயது 87.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் வசித்து வந்த சரோஜா தேவி, உடல்நலக் குறைவு காரணமாக திங்கட்கிழமை (ஜூலை 14) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மூப்படைதல் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளை அவர் எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் முரசு 2017ஆம் ஆண்டில் நடத்திய நேர்காணலின்போது அந்நாளிதழைப் படித்த சரோஜா தேவி.
தமிழ் முரசு 2017ஆம் ஆண்டில் நடத்திய நேர்காணலின்போது அந்நாளிதழைப் படித்த சரோஜா தேவி. - படம்: திமத்தி டேவிட்

‘கன்னடத்து பைங்கிளி’

‘அபிநய சரஸ்வதி’ என்றழைக்கப்பட்ட இவர், 1957ஆம் ஆண்டு இயக்குநர் பி.ஆர்.பந்துலுவால் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். ‘கன்னடத்துப் பைங்கிளி’ என்றும் இவர் செல்லமாக அழைக்கப்பட்டார்.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்று முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாகப் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.

1955ஆம் ஆண்டு ‘மகாகவி காளிதாசா’ கன்னடப் படம் மூலம் சரோஜா தேவி திரையுலகுக்கு அறிமுகமானார். மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. கன்னடத் திரையுலகின் முதல் நடிகையர் திலகம் (female superstar) என்று கருதப்படுபவர். 29 ஆண்டுகளாக முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.

கர்நாடக முதலமைச்சர், அரசியல் தலைவர்கள், திரைத் துறையினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

70 ஆண்டு காலப் பயணம்

எழுபதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ள இவர், கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் மொத்தம் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர்.

இவர் பல திரைப்பட விருதுகளையும் இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார். அதேபோல, வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி. அதன்பின்னர் 2வது கதாநாயகிக்கான வேடங்கள்தான் அவருக்கு கிடைத்தன.

அதே ஆண்டில் எம்ஜிஆர் சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் ‘ரத்னா’வாக அசத்திய சரோஜாதேவி, தமிழ் ரசிகர்கள் மனதிலும் ஊடுருவிப் போனார்.

எம்ஜிஆருடன் ‘திருடாதே’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘படகோட்டி’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘அன்பே வா’ உட்பட அவர் நடித்த அத்தனை படங்களும் வெற்றி பெற்றன.

சரோஜாதேவியால் மறக்க முடியாத பரிசென்றே ‘கல்யாணப் பரிசு’ படத்தைக் கூறிவிடலாம். இந்தப் படத்தின் மூலம் பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார் சரோஜாதேவி.

சிவாஜி கணேசனுடன் ‘பாகப்பிரிவினை’, ‘பாவமன்னிப்பு’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘புதிய பறவை’ என மனத்தில் நீங்கா இடம்பிடித்த படங்கள் பல.

இவர், கடைசியாக கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான ’நட்டசாரகபவுமா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்திருந்தார்.

அதிக சம்பளம் வாங்கியவர்

படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகிகளில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். தனது திருமணத்துக்குப் பிறகும் கணவர் பி.கே. ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் நாயகியாக நடித்தார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதன்முதலில் உடைத்தெறிந்தவர் சரோஜா தேவி.

சரோஜா தேவி எம்ஜிஆருடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாமரணம்