நயன்தாராவைப் பின்பற்றி தாமும் பக்திப் படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறாராம் திரிஷா.
இந்நிலையில், காலஞ்சென்ற இயக்குநர் ராம நாராயணனின் மகன் முரளி ராமசாமி தயாரிக்க உள்ள பக்திப் படத்தில் திரிஷாவை ஒப்பந்தம் செய்ய உள்ளதாகத் தகவல்.
கடந்த 1990ஆம் ஆண்டு ராம நாராயணனின் இயக்கத்தில், சீதா நாயகியாக நடித்த ‘ஆடி வெள்ளி’ படம் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டது. இதில் பாம்புகள், யானைகளுடன் தொடர்புடைய காட்சிகள் பெரிதாகப் பேசப்பட்டன. தற்போது அந்தப் படத்தை மறுபதிப்பு செய்ய உள்ளனர்.
சீதா நடித்த வேடத்துக்காக நயன்தாராவை அணுகியபோது ரூ.15 கோடி சம்பளமாகக் கேட்டாராம். ஆனால், பட்ஜெட் அதிகரித்துவிடும் என்பதால் தயாரிப்புத் தரப்பு பின்வாங்கிவிட்டது.
அடுத்த முயற்சியாக திரிஷாவிடம் பேசி வருகிறார்களாம். அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மறுபதிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.
முன்னதாக, ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க முயன்றார் ஆர்.ஜே.பாலாஜி. அம்முயற்சி கைகூடவில்லை.
இறுதியில் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க, அந்தப் படம் தயாராகிறது. எனவே, தேடி வந்துள்ள இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளாராம் திரிஷா.

