விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள இயந்திர யானை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த யானைக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழா ஜூலை 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நடிகை திரிஷாவும் சென்னையைச் சேர்ந்த ‘பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா’ என்ற தன்னார்வ அமைப்பினரும் இணைந்து இந்த நற்காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிஜ யானையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த இயந்திர யானை, தனது பெரிய காதுகள், தும்பிக்கை, வால் போன்றவற்றை ஆட்டுகிறது. இந்த யானை சக்கரங்கள் மூலம் வீதி உலா செல்லும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று மீட்டர் உயரம், 800 கிலோ எடை கொண்ட கஜா யானை தனது தும்பிக்கையால் பக்தர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது போன்றும் ஆசிர்வாதம் செய்வது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பலரும் அதனைக் கண்டு வியந்தனர்.
கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இதுபோன்ற இயந்திர யானையை கோவில்களில் பயன்படுத்தி வரும் சூழலில், தமிழகக் கோவிலில் தற்போது முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் உயிருள்ள யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த யானை வழங்கப்பட்டுள்ளது.
“இதேபோல், மற்ற கோவில்களிலும் இயந்திர யானைகள் பயன்படுத்தப்பட்டு, உண்மையான யானைகளை வனக் காப்பகத்தில் விட்டுவிட வேண்டும்,” என்று திரிஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் நடித்து வரும் திரிஷா, தனது 42 வயதிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் ‘தக் லைஃப்’ படம் வெளிவந்தது.