கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பலர் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அது பேரச்சுறுத்தலாக மாறி வருகிறது என்று கவலைப்படுகிறார் இளம் நாயகி பிரீத்தி அஸ்ராணி.
‘அயோத்தி’ படத்தில் கனமான கதாபாத்திரத்தில் நடித்து திரும்பிப் பார்க்க வைத்த அவர், அடுத்து ‘கிஸ்’ படத்தில் கவினுக்கு உதடு பதித்து முத்தமிட்டு இளையர்களைக் கிறங்கடித்தார்.
அண்மைய பேட்டியில் சமூக அக்கறையுடன் தெரிவித்த கருத்துகள் பலரால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன.
“எந்தத் துறையாக இருந்தாலும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். இப்போதுள்ள சூழலில் திரைக் கலைஞர்களோ அல்லது வேறு துறை சார்ந்த பிரமுகர்களோ, யாராக இருந்தாலும் சமூக ஊடகங்கள் மூலம் எளிதில் எடைபோட முடியவில்லை.
“எப்படிப்பட்ட கருத்துகளை வேண்டுமானாலும் பதிவிடலாம், பின்னர் பகிர்ந்து பரப்பலாம் என்றாகிவிட்டது. கேட்டால், கருத்து சுதந்திரம் என்கிறார்கள். ஆனால், அந்த சுதந்திரம் அளவுக்கு மீறி போகும்போது அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.
சமூக ஊடகங்கள்மீது ஏன் இவ்வளவு கோபம்?
“ஆதங்கம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். சிலரது செயல்பாடுகள் காரணமாக சமூக ஊடகங்கள் நச்சுக் கூடமாகிவிட்டன. இந்த அனுபவத்தை நடிகர்கள் மட்டுமல்ல, எல்லாரும் எதிர்கொள்கிறார்கள்.
“இதனால்தான் நான் ஏதாவது பதிவிட்டால், அதற்கு வரும் பின்னூட்டங்களைப் பார்க்க மாட்டேன். ஏனெனில் நேர்மறை, எதிர்மறை என இருவகை கருத்துகளும் இருக்கும். எனவே, எதிர்மறைக் கருத்துகளைப் பார்க்காமல் இருப்பதுதான் நல்லது,” என்று பாந்தமாகப் பேசும் பிரீத்தி அஸ்ராணி, தாயைவிட தன் அக்காவிடம்தான் அதிக நெருக்கம் காட்டியிருக்கிறாராம்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துப் பேட்டிகளிலும் அக்காவைப் பற்றி ஓரிரு வார்த்தைகளாவது பேசி வருகிறார்.
“அக்காவைப் பற்றி நிறைய சொல்ல முடியும். எல்லாரிடமும் முழுமையாக அன்பு செலுத்தக் கூடியவர். அவரிடம்தான் அதிகம் கற்றுக்கொண்டேன். குழந்தையாக இருந்தபோது அம்மாவின் அறிவுரைகள் வாழ்க்கையை ரசிக்க வைத்தன எனில், ஒரு கட்டத்துக்குப் பிறகு அக்காவின் வார்த்தைகள்தான் என்னை வழிநடத்துகின்றன. வாழ்க்கை, சினிமா என எதுவாக இருந்தாலும், அக்காவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவளாக இருக்கிறேன்,” என்று பாசம் காட்டுகிறார் பிரீத்தி அஸ்ராணி.
சிறு வயதிலேயே சினிமா இவரை ஈர்த்துவிட்டதாம். நடிகையாக மாற தமக்குத் தூண்டுகோலாக இருந்தது படப்பிடிப்புக்கான ‘லொகேஷன்கள்’தான்.
“அக்காவுடன் படப்பிடிப்புகளுக்குச் செல்லும்போது அங்குள்ள ரம்யமான சூழலும் அழகான அரங்குகளும் என் மனத்தை வெகுவாகக் கவர்ந்தன. அன்று தொடங்கிய சினிமா ஆசைதான் இன்று என்னை ஒரு நாயகியாக நடைபோட வைத்துள்ளது.
“என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தின் கதையை கதாநாயகி சுமந்து செல்வது போன்று இருந்தால் மிகவும் ரசிப்பேன். தொடக்கம் முதலே என் மனத்தில் இருக்கும் ஒரே இலக்கு நல்ல நடிகை எனப் பெயர் எடுப்பதுதான்.
“ஒரு வகையில் நான் நடிகை ஆக என் அக்காவும் ஒரு காரணம்,” என்று சொல்லும் பிரீத்திக்குப் பிடித்த கதாநாயகி சமந்தா. அதேபோல் எளிமையாக இருப்பதும் ரொம்பப் பிடிக்குமாம்.
“சாய் பல்லவியையும் கவனித்து வருகிறேன். நாம் நாமாக இருப்பதே ஒருவித மதிப்பைத் தரும். அதற்கு இவர்கள் இருவரும் நல்ல முன்னுதாரணம் என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் பிரீத்தி அஸ்ராணி.

