பொதுவாகத் திரையுலகம் என்பது ஆண்களுக்கான ஓர் உலகம் என்று ஆகிவிட்டது.
படத் தயாரிப்பு முதல் இயக்கம், இசை, ஒளிப்பதிவு, கடைசித் தொழிலாளி என்பது வரை அனைத்திலும் ஆண்களின் ஆதிக்கம்தான் அதிகம்.
பெண்களின் பங்களிப்பு என்பதே பெரிதாக இல்லை என்பதால், அவர்கள் யாரேனும் திரையுலகம் சார்ந்த ஏதேனும் பணியில் ஈடுபடும்போது அது கவனம் ஈர்க்கும் நிகழ்வாக இருக்கிறது.
வித்தியாசமான பிரிவுகளில், சவாலான வேலைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. அவர்களில் ஆஷிஷா ஸ்ரீனிவாசனும் ஒருவர். ஆஷிஷா குறித்த சிறு குறிப்பு இது.
‘பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2’, ‘இந்தியன் 2’, ‘வேட்டையன்’, ‘விடாமுயற்சி’ எனப் பல படங்களின் ‘லைன் புரொடியூசர்’ இவர். முன்பு சினிமாவை ரசிக்கும் சராசரி ரசிகர்களில் ஒருவராக இருந்தவர், இன்று அத்தனை முன்னணி திரைப் பிரபலங்களுடனும் இணைந்து பணியாற்றும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
‘லைன்’ தயாரிப்பாளர் என்றால் என்ன?
“ஒரு தயாரிப்பாளர் தன்னிடம் உள்ள பணத்தைச் செலவிட்டு திரைப்படம் தயாரிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒன்று, அவரே அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும் அல்லது வேறு ஒரு நிறுவனத்திடம் தேவையான தொகையைக் கொடுத்து, படம் எடுத்துக் கொடுக்கச் சொல்ல வேண்டும்.
“இவ்வாறு செய்யும் தனி நபர் அல்லது நிறுவனத்தை ‘எக்சிகியூட்டிவ்’ தயாரிப்பாளர் என்பர். இந்தப் பொறுப்புக்கும் கீழே உள்ள பணிகளைக் கவனிப்பவர்தான் ‘லைன்’ தயாரிப்பாளர்.
தொடர்புடைய செய்திகள்
“அதாவது, ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட நடிகர், நடிகைகளுடன் பேசி கால்ஷீட்டை உறுதி செய்வது, படத்தின் அன்றாடப் பணிகளைக் கவனிப்பது, திட்டமிடுவது, அனைத்தையும் நிர்வகித்து, படக்குழுவை ஒருங்கிணைப்பது என்று பல வேலைகள் உள்ளன. இதைத்தான் செய்கிறார் ஆஷிஷா ஸ்ரீனிவாசன். இனி அவர் பேசுவதைக் கேட்போம்.
“எனது சொந்த ஊர் சென்னை. சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் அதிகம். தந்தை சொந்தமாகத் தொழில் செய்கிறார். அம்மா ஓர் அறக்கட்டளைக்காகப் பணியாற்றுகிறார்.
“அக்கா ஆகான்ஷா அமெரிக்காவில் வேலை பார்க்க, நான் சென்னையில் படித்தேன். பின்னர் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டபோது, ‘இன்டர்ன்ஷிப்’ செய்ய வேண்டியிருந்தது.
“அப்பாவுக்கு இயக்குநர் மணிரத்னத்தைத் தெரியும். அந்தத் தொடர்பு காரணமாக ‘காற்று வெளியிடை’ படத்தில் இயக்குநர் குழுவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் சினிமா மீதான ஆர்வம் மேலும் அதிகரித்தது,” என்கிறார் ஆஷிஷா.
“லண்டன் சென்று மேலாண்மைப் பிரிவில் பட்ட மேற்படிப்பு மேற்கொண்ட ஆஷிஷா, சென்னை திரும்பிய கையோடு, மணிரத்னம் தயாரித்த ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் உதவி ‘லைன்’ தயாரிப்பாளராகப் பணியாற்றினாராம்.
அதன் பின்னர் ‘பொன்னியின் செல்வன்’, ‘வேட்டையன்’, ‘விடாமுயற்சி’ என்று அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கவே, இன்று நின்று பேசக்கூட நேரமில்லாமல் பணி நிமித்தம் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக வலம் வருகிறார்.
“வெளியிலிருந்து நான் பார்த்த சினிமா உலகம் வேறாக இருந்தது. உள்ளே சென்று பார்த்த பிறகு கிடைக்கும் அனுபவம் வேறு மாதிரியாக உள்ளது.
“இயக்குநர் முதல் ஒளிப்பதிவு உதவியாளர் வரை அனைவரும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இயக்குநர் மணிரத்னம், ரஜினி, கமல் என அனைவருமே தங்கள் உழைப்பால் அசர வைக்கிறார்கள்.
“ரஜினி எப்போதும் ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுப்பார். நம்மால் எப்போதும் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும் என்பார் கமல்ஹாசன். உண்மையும் கடின உழைப்பும் முன்னேற வைக்கும் என்பார் அஜித்.
“ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், ஜெயராம் எனப் பலருடனுடம் இனிய அனுபவங்கள் உண்டு. திரைத்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு நொடியும் உற்சாகம் தருகிறது,” என்கிறார் ஆஷிஷா.