தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நல்ல படைப்பில் இடம்பெற்ற மனநிறைவு உள்ளது: சித்தார்த்

2 mins read
b7c7bc38-23bf-46eb-aa52-774c04bd0cc2
 ‘3 பிஹெச்கே’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

‘எட்டுத் தோட்டாக்கள்’ ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘3பிஹெச்கே’ (3BHK).

சென்னை போன்றதொரு பெருநகரில் சொந்த வீடு வாங்கப் போராடும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கைக் கதைதான் இந்தத் திரைப்படம். அம்ரித் ராம்நாத் இசையமைத்திருக்கிறார்.

ஜூலை 4ஆம் தேதி திரை யரங்குகளில் வெளியீடு காண உள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் ரவிமோகன், இயக்குநர்கள் ராம், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

ரவி மோகன் பேசியபோது, சித்தார்த் உடனான நட்பு குறித்தும் தாம் வாடகை வீட்டில் இருப்பது குறித்தும் சுவாரசியமாகக் குறிப்பிட்டார்.

“இந்தப் படம் சொந்த வீடு இல்லாதது குறித்துப் பேசுகிறது. நான் சொந்த வீட்டில்தான் பிறந்தேன், வளர்ந்தேன். ஆனால், இப்போது வாடகை வீட்டில் வசிக்கிறேன்.

“அதனால் இந்தப் படத்துடன் உணர்வுபூர்வமாக என்னை தொடர்புப்படுத்திக்கொள்ள முடிந்தது. இனி புது வாழ்க்கையைத் தொடங்கப் போகிறேன். அந்த ஊக்கத்தை இந்தப் படம் எனக்குக் கொடுத்திருக்கிறது,” என்றார் ரவி மோகன்.

மனத்திற்கு நெருக்கமான, அற்புதமான திரைப்படம் இது என்றும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற வேண்டிய படம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் சித்தார்த், இப்படியோர் நல்ல படம் தனது 40வது படமாக அமைந்தது பேரதிர்ஷ்டம் என்றார்.

“முதல் படத்தில் என்னுடைய வெற்றிக்காக பெற்றோர் நிறைய செய்தனர். இப்போது 40வது படம் வெற்றிபெற தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பலர் மெனக்கெட்டுள்ளனர்.

“இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யார் என்ன சொல்கிறார்கள், படம் வெற்றியா தோல்வியா என்பதையெல்லாம் கடந்து, நல்ல படைப்பில் நாமும் பங்களித்திருக்கிறோம் என்ற மனநிறைவு நிச்சயம் இருக்கும். படம் பார்ப்பவர்களுக்கும் அந்த மனநிறைவு கிடைக்கும்,” என்றார் சித்தார்த்.

குறிப்புச் சொற்கள்