நிறைய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் உள்ளன: வர்ஷினி வெங்கட்

3 mins read
b0268b3d-86a4-4b83-88c5-3a76fa66e13f
வர்ஷினி வெங்கட். - படம்: ஊடகம்
multi-img1 of 2

வர்ஷினி வெங்கட் குறித்து இளையர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும்.

இன்ஸ்டகிராமில் இவர் வெளியிடும் உடற்பயிற்சி தொடர்பான காணொளிகளை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் திரைத்துறையில் அறிமுகமாகும் முன்பே பிரபலமாகிவிட்டார் வர்ஷினி.

அதன் பிறகு, சின்னத்திரையில் ‘ரியாலிட்டி ஷோ’ மூலம் மேலும் பிரபலமாக, இன்று கைவசம் ஆறு திரைப்படங்கள் வைத்துள்ளார். அவற்றுள் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்-2’ படம் குறிப்பிடத்தக்கது.

தற்போது வர்ஷினி நாயகியாக நடித்துள்ள ‘சொட்டச் சொட்ட நனையுது’ படம் விரைவில் வெளியாகிறது.

இவர் திரையுலகில் அறிமுகமாகி, எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 2016ஆம் ஆண்டிலேயே ‘சதுரங்க வேட்டை-2’ படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்தது. திரிஷா, அரவிந்த் நடித்த படம் என்றாலும் சில சிக்கல்கள் காரணமாக அப்படம் இன்னும் திரைகாணவில்லை.

அதன் பிறகு புது வாய்ப்புகள் ஏதும் அமையாத நிலையில், துணை நடிகையாக சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் வர்ஷினி. நல்ல வாய்ப்புகளைத் தேடி ஓடிக்கொண்டே இருந்ததால் நேரம் கடந்து போனதே தெரியவில்லை என்கிறார் வர்ஷினி.

“அப்போதுதான் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. சமூக ஊடகங்களிலும் பிரபலமானதால் என்னைப்பற்றி பலருக்கும் தெரியவந்தது.

“பள்ளிப் படிப்பை முடித்த கையோடு புகைப்படக்கலை தொடர்பாக பட்டப்படிப்பை முடித்தேன். புகைப்படம் எடுப்பதில் எனக்கு நீண்ட நாளாக விருப்பம் இருந்ததால் அதைத் தேர்வு செய்து படித்தேன். நான் எடுத்த சில புகைப்படங்களுக்கு விருதுகளும்கூட கிடைத்துள்ளன. அப்பா ‘மார்க்கெட்டிங்’ துறையில் பணியாற்றுகிறார். அம்மா, இல்லத்தரசி. நான் சென்னைப் பெண் என்பதால் நன்றாகத் தமிழில் பேசி நடிப்பேன். எனவே, எனக்குத் தயங்காமல் வாய்ப்பு அளிக்கலாம்,” என்கிறார் வர்ஷினி.

பட்டப்படிப்பை முடிப்பதற்குள் சினிமா மீது ஆர்வம் வந்துவிட்டதாம். எனினும், சினிமா உலகில் யாரையும் தெரியாது. எந்தவித சினிமா பின்னணியும் இல்லை. இருப்பினும் நம்பிக்கையோடு முயற்சிகளைத் தொடங்கி உள்ளார்.

“ஆனால், வீட்டில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அந்தத்துறை மீது அச்சம். அதனால் தயங்கினார்கள். பிறகு என்மீதான நம்பிக்கையில் ஒப்புக்கொண்டனர். இப்போது அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வருவதால் அனைவருக்குமே மகிழ்ச்சி.

“என்னைப் பொறுத்தவரை, உடற்பயிற்சி என்பது அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதி எனலாம். எப்படி மூன்று வேளையும் சாப்பிடுகிறோமோ, அதுபோன்று நாள்தோறும் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் தூக்கம் வராது,” என்கிறார் வர்ஷினி.

அடுத்து விமலுடன் இணைந்து நடித்துள்ள ‘லக்கி 777’ படத்தின் வெளியீட்டை எதிர்பார்க்கிறாராம். இந்தப் படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை. எனினும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்.

மேலும் ஸ்ரீகாந்துடன் இணைந்து நடித்துள்ள ‘வரமே சாபம்’ என்ற படம் வெளியீடு காணத் தயார் நிலையில் உள்ளது.

“நயன்தாராவுடன் ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தில் நடனமாடி இருக்கிறேன். இதற்காகத் தனியாக சில நாள்கள் நடனப் பயிற்சியில் ஈடுபட்டேன். அதேபோல், சிவக்குமார் இயக்கத்தில் ‘எக்ஸ் ஒய்’ (XY) என்ற தலைப்பில் உருவான படமும் ‘லாரா’ என்ற படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

“எனது உடற்கட்டு கம்பீரமாக உள்ளதாகக் கருதுவதால் ராணுவ அதிகாரி, காவல்துறை அதிகாரி போன்ற வேடங்கள் அமைந்தால் மகிழ்ச்சியாக நடிப்பேன். மனத்தில் நிறைய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் உள்ளன. இப்போதைக்கு நல்ல நடிகை என்று பெயர் வாங்க வேண்டும். அதை மட்டுமே இலக்காகக் கொண்டு, ஓடிக்கொண்டு இருக்கிறேன்,” என்கிறார் வர்ஷினி.

குறிப்புச் சொற்கள்