தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பத்தாண்டு திருமண வாழ்க்கை அன்பை அதிகப்படுத்தி உள்ளது: விதார்த் நெகிழ்ச்சி

2 mins read
d9e5c580-7e54-45c8-bf23-9f0dc9baad34
மனைவி, மகளுடன் விதார்த். - படம்: ஊடகம்

ஜூன் மாதம் வந்துவிட்டால் போதும். நடிகர் விதார்த் வீட்டில் ஒரே கொண்டாட்டம்தான். அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அவர் தன் மனைவி காயத்ரியைக் கைப்பிடித்தது, அவர்களுக்கு மகள் பிறந்தது, வீட்டுக் கிரகப்பிரவேசம் செய்தது என எல்லாமே ஜூன் மாதத்தில்தான் நிகழ்ந்தனவாம்.

“இந்த ஆண்டு ஜூன் மாதம் கூடுதல் மகிழ்ச்சி சேர்த்தது. காரணம், இது எங்களுக்குத் திருமணமான பத்தாவது ஆண்டு. இந்தப் பத்தாண்டு பயணம் எங்களுக்குள் நிறைய அன்பையும் அன்யோன்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது,” என்கிறார் விதார்த்.

மனைவி காயத்ரிக்கு பென்ஸ் ரக கார்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் திருமண நாள் பரிசாகப் புத்தம் புதிய பென்ஸ் கார் ஒன்றை வாங்கிப் பரிசளித்துள்ளார்.

இதே அன்போடு, புரிந்துணர்வோடு இறுதிவரை வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்பதே தமது ஆசை என்கிறார்.

எதார்த்தமான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை வசப்படுத்திய நடிகர்களின் பட்டியலில் விதார்த்துக்கும் நிச்சயம் இடமுண்டு.

மனைவி காயத்ரி தேவி, இவர்களின் 8 வயது மகள் காதம்பரி ஆகியோருடன் விதார்த் வாழ்க்கை அழகாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

‘`எங்களைப் பார்க்கும் பலரும் கேட்கும் முதல் கேள்வி, காதல் திருமணமா என்பதுதான். ஆனால் எங்களுடைய திருமணம் பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் என்பதுதான் உண்மை,” என்கிறார் காயத்ரி.

‘`எனக்கு கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை. ‘வானத்தைப் போல’ படத்தில் வரும் விஜய்காந்த் போல், அண்ணன், தம்பிகளுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களுடைய குழந்தைகளைக் கொஞ்சியபடியே இருந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன்.

“ஆனால் தம்பிகள் விடவில்லை. அவர்கள் வற்புறுத்தவே, திருமணத்துக்குச் சம்மதித்தேன். காயத்ரியின் புகைப்படத்தைப் பார்த்தேன். பார்த்ததும் பிடித்திருந்தது. நேரில் பார்த்ததும் இன்னும் பிடித்தது,” என்கிறார் விதார்த்.

இடையில் திடீர் திருப்பமாக இருவருக்கும் ஜாதகம் பொருந்தவில்லை என்று கூறி திருமணம் வேண்டாம் என்று இவரது தாயார் கூறிவிட்டாராம். ஆனால் அதை மீறி காயத்ரியின் கரம் பிடித்துள்ளார் விதார்த்.

“திருமணத்துக்கு முன்பே அம்மாவை விதார்த் சமாதானப்படுத்திவிட்டார். அன்று முதல் இப்போதுவரை இருவரும் நண்பர்கள் போல் பழகுகிறோம்.

சில படங்களில் கதாநாயகிகளுடன் அவர் நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சிகள் இருக்கும். இதற்காக, ஒருநாளும் நான் விதார்த்தை சந்தேகப்பட்டதோ, கேள்வி கேட்டதோ இல்லை,” என்று பக்குவமான மனைவியாகப் பேசுகிறார் காயத்ரி.

குறிப்புச் சொற்கள்