தமிழ்த் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அழியாத பெயரும் புகழும் பெற்றுத் தந்தவர் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகருமான பி ஆர் பந்துலு. சிவாஜியை வைத்து பெரிய பொருட்செலவில் அவர் தயாரித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வரலாற்றுச் சிறப்புமிக்க படம். அந்தப் படம் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் சிறந்த படமாகத் தயாரிப்பாளர் பந்துலுக்கு, சிறந்த நடிகராக சிவாஜிக்கு, சிறந்த இசையமைப்பாளராக ஜி ராமநாதனுக்கு என ஏகப்பட்ட விருதுகளைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து சிவாஜியை வைத்தே பல படங்கள் தயாரித்தார் பந்துலு. அவற்றில் வசூலில் தோல்வியாக முடிந்தவை ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘முரடன் முத்து’ ஆகிய இரண்டு படங்கள்தான். அவர் எடுத்த ‘கர்ணன்’ படம் திரையரங்குகளில் நன்கு ஓடினாலும் அதற்குச் செலவழித்த பணத்தை அவரால் முழுவதுமாக ஈட்ட முடியவில்லை. அதற்காக குறைந்த பொருட்செலவில் ‘முரடன் முத்து’ என்ற படத்தை எடுத்து நிலைமையை சமாளிக்க எண்ணினார் பந்துலு.
அவர் எடுத்த நல்ல கதையம்சம் கொண்ட ‘முரடன் முத்து’ படத்தில் சிவாஜி, தேவிகா, பந்துலு, அசோகன், வி கே ராமசாமி, நாகேஷ், எம் வி ராஜம்மா என முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க குறைந்த செலவில் கிராமிய சூழலில் ஆடம்பரக் காட்சிகள் இல்லாமல் படத்தை எடுத்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கர்ணன்’ போன்ற அதிக பொருட்செலவில் எடுத்த படங்களுக்கு நடு நடுவே இதுபோல் சிவாஜியை வைத்து குறைந்த செலவில் எடுத்த ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’, ‘சபாஷ் மீனா’, ‘பலே பாண்டியா’ போன்ற படங்களும் வெற்றி பெற்ற நிலையில் இது வெற்றி தனக்கு சிரமத்தைக் குறைக்கும் என பந்துலு நினைத்தார். படம் 1964ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்தது. அதே நாளில், 1964ஆம் ஆண்டு ஏ பி நாகராஜன் தயாரித்த, சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்த நவராத்திரி படம் மிகுந்த பரபரப்புடன் வெளியாக இருந்தது. சிவாஜியின் 100வது படம், ஒன்பது வேடங்களில் அவர் நடிப்பை தாங்கி வருகிறது என்பதால் சிவாஜியும் அதற்கு அதிக கவனம் கொடுத்தார். அது பந்துலுவுக்கு நெருடலாகவே இருந்தது. அதற்காக அவர் முரடன் முத்துவை கைவிட்டு விடவும் இல்லை. அதிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் சிவாஜி.
படம் வெளியாகும் நாள் நெருங்கவே இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் ‘முரடன் முத்து’ சரியாக ஓடாதே என்ற சந்தேகம் ஏற்பட சிவாஜி பந்துலுவை அணுகி படத்தை சற்றுத் தள்ளி வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். அதைக் கேட்ட பந்துலுவுக்கு கோபம். “நான் சீனியர்...” என்று கூறினார். அதாவது தயாரிப்புத் துறையில் தான் முன்னோடி என்றும் வேண்டுமானால் ஏ பி நாகராஜன் அவர் தயாரித்த நவராத்திரி படத்தைத் தள்ளி வெளியிடட்டும் என்ற அர்த்தத்தில் கூறினார். நவராத்திரி படம் அவருக்கு 100வது படம் என்ற பெருமையுடன் வரவுள்ளதால் அது நடக்காத காரியம் என்று அறிந்த சிவாஜி, எதற்கும் யோசித்துச் செயல்படுமாறு பந்துலுவிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பந்துலுவுக்கு ஏற்பட்ட கோபத்தில் அவர் சிவாஜி சொன்னதைக் கேட்பதாக இல்லை. படமும் தீபாவளி வெளியீடாக வந்து தோல்வியைத் தழுவியது.
இனி சிவாஜியை வைத்துப் படம் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த பந்துலு அடுத்து ஒரு ராஜா-ராணி கதையைக் கையில் எடுத்தார். அதற்கு ஜெய்சங்கரையும் அவருக்கு ஏற்ற ஒரு நடிகையையும் ஜோடியாகச் சேர்த்து படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். இதை அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூற, அவர், ராஜா-ராணி கதையா, ஜெய்சங்கரை விடுங்கள், எம்ஜிஆர், ஜெயலலிதாவை வைத்து வண்ணத்தில் படத்தை எடு, பணத்துக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று உற்சாகமூட்டினார்.
அப்படிப் பிறந்ததுதான் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம். சிவாஜிக்கு பதிலாக எம்ஜிஆர்-ஜெயலலிதாவை நாடிய பந்துலு, பட ஆரம்ப விழாவுக்கு எம்ஜிஆரையே தடபுடலாக அழைத்து விளம்பரம் கொடுத்தார்.
நண்பர் சொன்ன யோசனையும் வீண்போகவில்லை. படக் காட்சிகள் வண்ணத்தில் சிறப்பாக எம்ஜிஆர்-ஜெயலலிதா என்ற புது ஜோடியை அறிமுகம் செய்தன. பாடல்களும் படத்தைக் கைதூக்கிவிட்டது. எம்ஜிஆர்-ஜெயலலிதா இணைந்து ‘நாணமோ, இன்னும் நாணமோ, அந்த ஜாடை நாடகம் என்ன, இந்தப் பார்வை கூறுவது என்ன, நாணமோ...’ என்று கவிஞர் வாலியின் பாடலைக் கேட்ட எம்ஜிஆர் ரசிகர்கள் அன்று திரையரங்குகளை அமர்க்களப்படுத்தினர்.
அதன் பின், ‘நாடோடி’, ‘ரகசிய போலிஸ் 115’, ‘தேடி வந்த மாப்பிள்ளை’ என எம்ஜிஆரை வைத்து மேலும் சில படங்களை எடுத்தார் பி ஆர் பந்துலு.

