சூர்யா நடிப்பில் அடுத்த ஆண்டு மூன்று படங்கள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கங்குவா’ படத்துக்குக் கடுமையாக பாடுபட்டு நடித்திருந்தார் சூர்யா. ஆனால், அப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் இனி குறுகிய காலத் தயாரிப்பாகச் சில படங்களில் நடிக்க முடிவு செய்திருந்தார் சூர்யா. அந்த வரிசையில் அடுத்த ஆண்டு அவருடைய நடிப்பில் மூன்று படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 23ஆம் தேதி இப்படத்தினை வெளியிடலாம் என்று ட்ரீம் வாரியர் நிறுவனம் ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் ‘சூர்யா 46’. இப்படம் 2026 கோடையில் வெளியாக உள்ளது. இது ஒரு பெரிய பட்ஜெட் படமாகும், வெற்றிக்காக காத்திருக்கும் சூர்யாவுக்கு இது ஒரு ஊக்குவிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கேஜிஎஃப் நடிகை ரவீனா டாண்டன், ‘சூர்யா 46’ திரைப்படத்தில் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். ரவீனாவின் பிறந்தநாள் அன்று படக்குழு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
சமூக ஊடகங்களில், தயாரிப்புக் குழு ரவீனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து இந்த அறிவிப்பை வெளியிட்டது.
“என்றென்றும் அழகான ரவீனா டாண்டனுக்கு-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - டீம் சூர்யா 46. உங்களை எங்கள் குழுவில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், மேலும் ஒரு அற்புதமான பயணத்தை எதிர்நோக்குகிறோம்,” என்று படக்குழு பதிவிட்டுள்ளது.
தமிழில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக சூர்யா 46 திரைப்படம் உள்ளது. இந்த ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் நடந்த பாரம்பரிய பூஜையுடன் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். ராதிகா சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழுவினர் முனைப்பு காட்டி வருகிறார்கள். இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் அனைத்துமே விற்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இதனை சூர்யாவே தயாரிக்கவுள்ளார். இதில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
இப்படமும் குறுகிய கால தயாரிப்பாகவே உருவாகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இப்படத்தினை வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறது படக்குழு.

