ரசிகர்களும் படத்துடன் பயணமாவதுதான் ‘மாரீசன்’ படக் கதை: சுதிஷ் சங்கர்

3 mins read
4bd80907-e184-47c1-9437-4b2a727aa822
‘மாரீசன்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது ‘மாரீசன்’ படம். இயக்குநர் சுதிஷ் சங்கர் மெல்லிய நல்லுணர்வு படைப்பை உருவாக்கியுள்ளார்.

பகத் ஃபாசிலும் வடிவேலும் கூட்டணி அமைத்து, ஒவ்வொரு காட்சியையும் ரசனையோடு மெருகேற்றி தரமான படமாக மாற்றியுள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர்.

படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு இணையவெளியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இது தரைவழிப் பயணத்துடன் தொடர்புள்ள கதையாம். இதுபோன்ற படங்களில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.

இதில் அப்படி அல்லாமல் கதாபாத்திரங்களுடன்தான் பயணத்தைத் தொடர்வோம் என்கிறார் சுதிஷ் சங்கர்.

நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை வரை வந்து, அங்கிருந்து கோயம்புத்தூருக்குச் செல்கிறார்கள் பகத்தும் வடிவேலும். இவர்களுடன் மோட்டார் சைக்கிளில் படம் பார்க்கும் ரசிகர்களும் பயணமாவதுதான் கதை.

இருவரும் இந்த ஊர்களைக் கடந்து போகும்போது நாம் இந்த ஊர்களைவிட இவர்களைத்தான் அதிகம் கவனிப்போமாம். இந்தப் பயணத்தில் இவர்களிடையே என்ன நடக்கிறது என்பதில் அடங்கியிருக்கிறது ஆகப்பெரிய சுவாரசியம் எனப் புதிர்போடுகிறார் இயக்குநர் சுதிஷ்.

“கதைப்படி வடிவேலு ஞாபகமறதி (Alzheimer) நோயாளி. அவரிடம் பெரும் பணம் இருப்பதை ஒரு ஏடிஎம்மில் இருக்கும்போது ஃபகத் ஃபாசில் பார்த்துவிடுகிறார். அவரிடம் இருந்து பணத்தை அபகரிக்கத் திட்டமிடுகிறார்.

“எங்கே போகிறீர்கள் எனக் கேட்க, திருவண்ணாமலைக்குப் போவதாகச் சொல்கிறார் வடிவேலு. அவரைச் சமாதானப்படுத்தி பைக்கிலேயே நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்கிறார் ஃபகத். அதற்குள் அவரது பற்று அட்டை (டெபிட் கார்ட்) எண்ணைப் பெற்று பணத்தை எடுத்துவிடலாம் என்பது ஃபகத்தின் திட்டம்.

“அடித்துக் கேட்கமுடியாதபடி வடிவேலு ஞாபகமறதி கொண்டவராக இருப்பதால் வேறு வழியில்லை. அவரோடு இருந்து, இணக்கமாக உரையாடி அந்தப் பணத்தை எடுக்க முடிந்ததா, என்னதான் ஆனது என்பது மீதிக் கதை.

“ஃபகத் ஒரு திருடன். அவர் திருட்டு வாகனத்தில்தான் பயணம் செய்கிறார். அது எம்எல்ஏ உதவியாளரின் மகன் பைக். அதைத் தேடியும் ஒரு குழு வருகிறது. அப்போது என்ன நடக்கிறது என்பதும் நல்ல திருப்பமாக இருக்கும். படம் பார்த்து முடிந்ததும் ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறோம் என்பதை உணர முடியும்.

“ஒரு கதாநாயகனுக்கான அத்தனை இலக்கணங்களையும் உடைத்தெறிந்தவர் ஃபகத் ஃபாசில். அவருடன் மகா கலைஞன் வடிவேலு இணைந்துள்ளார். இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சியுடன் தொடங்குகிறது ‘மாரீசன்’ படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பு.

“வடிவேலுவை இதுவரை ஒரு கோணத்தில்தான் நாம் பார்த்திருக்கிறோம். அவர் இப்படித்தான் இருப்பார் என்பதும் தெரியும். ஆனால், இந்தப் படம் அதற்கு நேர் எதிர்பக்கமாக இருக்கும். இதுவரை ஏற்றிராத, ஒரு சவாலான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

“இந்தப் படத்தின் உணர்வோடு சொல்வதாக இருந்தால் வடிவேலு பண்ண வேண்டிய பாத்திரத்தில் ஃபகத் ஃபாசிலும், அவரது வேடத்தில் வடிவேலுவும் நடித்துள்ளனர் எனலாம்.

“இந்த இரண்டு பேரின் ஆட்டம் மற்றும் விளையாட்டில்தான் இந்தப்படமே அடங்கியிருக்கிறது. இருவருமே ஏட்டிக்குப் போட்டியாக நடித்திருக்கிறார்கள்.

“அப்படி ஒரு சூழல்தான் படத்தில் இருக்கும். அதை எந்த அளவுக்கு சுவாரசியமாகச் செய்திருக்கிறார்கள் என்பதில் இருக்கிறது திரைக்கதை அமைப்பு,” என்கிறார் சுதிஷ் சங்கர்.

குறிப்புச் சொற்கள்