‘விஜய் ஆண்டனி லைவ் இன் கான்செர்ட்’ என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் முன்னிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்.
அப்போது ஒரே பாதையில் செல்வதற்காக ரசிகர்களை வரிசையில் நிற்க வைத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதை வென்ற விஜய் ஆண்டனி, நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார்.
கடந்த 19ஆம் தேதி அவரது நடிப்பில் 25வது படமாக வெளிவந்த ‘சக்தி திருமகன்’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார்.
“மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கம் எல்லா கட்சிக்காரர்களிடமும் இருக்கிறது.
“பிறகு, ஏன் நாம் அவர்களை விரோதிகளாகவும் போட்டியாளராகவும் பார்க்க வேண்டும். ஒருவரை தாழ்த்தியும் உயர்த்தியும் பேச வேண்டும்?
“எனக்கு எல்லா கட்சியும் பிடிக்கும். அதனால், நான் எல்லா கட்சியுடனும் இணைந்திட முடியுமா? அதற்கு ஜனநாயகத்தில் வாய்ப்பிருக்கிறதா?
“கூட்டம் வாக்காக மாறாது என்கிறார்கள். அது அவர்களின் கருத்து. என்னைப் பொறுத்தவரை எல்லா அரசும் நன்றாகவே செயல்படுகிறது,” என்றார்.
‘சக்தி திருமகன்’ படம் தமிழ்நாட்டை மையப்படுத்தியோ, இந்திய அரசை மையப்படுத்தியோ எடுக்கவில்லை.
இந்தப் படத்தில் பேசப்பட்ட பிரச்சினைகள் உலகம் முழுவதும் இருப்பதுதான் என்றவரிடம், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பதில் தந்த விஜய் ஆண்டனி, “நடிகர் விஜய்யுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடும் நோக்கமெல்லாம் இப்போதைக்கு இல்லை.
“அனைத்துக் கட்சியினரும் அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
“குப்பை கொட்டிக் கிடக்கும்போது இவர்தான் அள்ள வேண்டும், அவர்தான் அள்ள வேண்டும் எனப் போட்டி போடாமல் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்,” என்றார்.

