‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் மூலம் இளையர்களை உற்சாகத் தாளம்போட வைத்த இளம் பாடகி சுப்லாஷினி, அடுத்து ‘மோனிகா மோனிகா’ பாடல் மூலம் துள்ளாட்டம் போட வைத்துள்ளார்.
‘கூலி’ படத்தில் இடம்பெற்று ‘ஹிட்’டாகியுள்ள இந்தப் பாடலை முதன்முதலாக கேட்டபோது, ரசிகர்களைப் போலவே இவரும் ‘சும்மா அதுருதுல’ என்று இசையமைப்பாளர் அனிருத்திடம் சொன்னாராம்.
“முதன்முதலாக இவ்வளவு பெரிய படத்தில் பாடப்போகிறேன். பாடல் எப்படியோ வெளியாகப் போகிறதோ, எப்படி இருக்குமோ, யாருக்கெல்லாம் பிடிக்குமோ என்று பலவிதமாக பயமே. ஆனால், இப்படிப்பட்ட எல்லா பயத்தையும் அனிருத் சர்வ சாதாரணமாக உடைத்துவிடுவார்.
“என் திரைப்பயணத்தில் ‘மோனிகா’ பாடல் ஒரு முக்கியமான மைல் கல். இந்தப் பாடலை என்னுடன் எந்தவிதப் பதற்றமோ எதிர்பார்ப்போ இல்லாமல் இயல்பாக, ஜாலியாக பேசிக்கொண்டே பதிவு செய்துவிட்டார் அனிருத்.
“அதேபோல் ஹைதராபாத் இசைக் கச்சேரியிலும்கூட என்னைப் பதற்றப்பட வைக்காமல் அனைவரது முன்னிலையிலும் பாட வைத்தார். பாடுவதற்கு முன்பிருந்த தயக்கம், அச்சம் எல்லாமே காணாமல் போய்விட்டது.
“மேடையில் பாட வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. முதன்முதலாக இதைச் சாத்தியமாக்கியது சந்தோஷ் நாராயணன்தான். பல பெரிய படங்களில் பாடியுள்ளேன். ஆனால், எதையுமே வெளியே சொல்ல முடியாது. காரணம், எந்தப் பாடலாக இருந்தாலும், வெளியானால் மட்டுமே அது படத்தில் இருக்கிறதா இல்லையா என்பது உறுதியாகும்.
“இன்று இணையத்தில் நுழைந்தாலே, நான் பாடிய பாடல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. அதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது,” என்கிறார் சுப்லாஷினி.
கொரோனா ஊரடங்கின்போது இவர் வெளியிட்ட ‘காத்தாடி’ என்ற தனி இசைப்பாடல் மிகவும் பிரபலம். அதன் காணொளியைப் பார்த்துவிட்டுத்தான் ஜிவி பிரகாஷ், ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் பாடும் வாய்ப்பை எனக்கு அளித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இவரது தந்தை ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. சிறு வயதிலேயே இசை மீது சுப்லாஷினிக்கு ஆர்வம் அதிகம். ஆனால், சினிமா, ஊடகம் என்றாலே தயங்கும் சராசரி நடுத்தர வர்க்க குடும்பத்தாரைப் போல் இவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
“பட்ட மேற்படிப்பை முடித்ததும் அப்பா, அம்மாவை உட்கார வைத்து அழகு பார்க்க ஆசைப்பட்டேன். இருவரும் என்னை வளர்க்க நிறைய சிரமப்பட்டுள்ளனர். இசை மீது ஆர்வம் இருந்தாலும் வருமானத்தின் மீதுதான் என் கவனம் இருந்தது. இசைத்துறையில் இந்த அளவு சாதிப்பேன் எனக் கனவில்கூட நினைத்ததில்லை.
“ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது யூடியூபில் ஒரு பாடலை வெளியிட்டால், அதுவே போதும் என்பதுதான் எனது ஒரே இலக்காக இருந்தது,” என்கிறார் சுப்லாஷினி.

