நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மகன் கல்லூரி முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளார்.
இதேவேளையில், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதத் தயாராகி வருகிறார் முத்துக்காளை.
அதெப்படி மகன் பட்டப்படிப்பையும் தந்தை பள்ளிப் படிப்பையும் மேற்கொள்வது சாத்தியம் எனப் பலரும் கேட்கிறார்களாம்.
அதற்கு விரிவாக விளக்கம் அளித்துள்ளார் முத்துக்காளை.
“அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்தபோது, பாதியில் படிப்பை நிறுத்தியவன் நான். அதற்கு 22 ரூபாய் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத வறுமை ஒரு காரணம் என்றால், என் கொழுப்பு மற்றொரு காரணம்.
“என் தந்தையின் மளிகைக்கடையில் வேலைக்குப் போனேன். காலை 7 மணி முதல் இரவு 11 மணிவரை வேலை. மூன்று ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
“மீண்டும் படிக்கலாம் என்றால், என்னுடன் படித்தவர்கள் எல்லாம் 10ஆம் வகுப்பில் இருக்க, நான் மட்டும் மீண்டும் 6ஆம் வகுப்புக்குச் செல்ல வெட்கமாக இருந்தது.
“பிறகுதான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. சென்னைக்குப் போவதாகச் சொன்னபோது, ‘6ஆவது வரை படித்தவன் அங்கு போய் என்ன செய்வாய்’ என்ற கேலிதான் அதிகம் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு வேகத்தில் தனிமுறை பயிற்சி வகுப்பில் (டுட்டோரியல்) சேர்ந்து 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். சென்னையில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தபோது, ‘என்ன படித்திருக்கிறாய்’ என்றுதான் பலரும் முதலில் கேட்டனர்.
“8ஆம் வகுப்பு என்று சொல்ல வெட்கமாக இருந்தது. அதனால் 10ஆம் வகுப்பு தேர்தெழுதி வெற்றி பெற்றேன்.
“அப்போது திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டம் பெறலாம் என்று கேள்விப்பட்டு, முதலில் இளங்கலை, பிறகு முதுகலைப் பட்டங்களைப் பெற்றேன்.
“முனைவர் படிப்புக்கு முயற்சி செய்தபோது, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவது கட்டாயம் என்றனர்.
“நான் 10ஆம் வகுப்பு படித்து பட்டம் பெற்றவன். ஆனால், 12வது வகுப்புத் தேர்வை எழுதுவது என முடிவெடுத்துவிட்டேன். அதனால்தான் மகன் கல்லூரிக்குச் செல்ல, நான் இந்தப் பக்கம் 12ஆம் வகுப்புப் பாடங்களைப் படித்து வருகிறேன்.
“நிச்சயம் ஒருநாள் முனைவர் பட்டம் பெறுவேன்,” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் முத்துக்காளை.

