ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று, கோடம்பாக்கத்தில் ஆறு புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
அதன் பின்னர், ஆகஸ்ட் 14ஆம் தேதி ‘கூலி’ திரைப்படம் வெளியாவதால், பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு அந்தப் படத்தின் மீதுதான் குவிந்துள்ளது.
ஆகஸ்ட் 14 தொடங்கி, இரு வாரங்களுக்குத் தமிழ்த் திரையரங்குகளை ‘கூலி’ படம்தான் ஆக்கிரமித்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி ஏழு புதுப் படங்கள் மட்டுமே வெளியாகின.
இந்நிலையில், வரும் 8ஆம் தேதி ‘பாய்’, ‘காத்து வாக்குல ஒரு காதல்’, ‘மாமரம்’, ‘ராகு கேது’, ‘ரெட் ஃபிளவர்’, ‘உழவர் மகன்’ ஆகிய ஆறு படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே குறைந்த செலவில் உருவாகியுள்ள படங்கள்.
ரஜினியின் ‘கூலி’ படம் வெளியான பின்னர், சிறிய படங்களைத் திரையிட போதுமான திரையரங்குகள் கிடைக்காது என்பதால் பல படங்களை முன்கூட்டியே வெளியிடத் தயாரிப்புத் தரப்பு முடிவெடுத்துச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

