ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மதராஸி’. படப்பிடிப்பு முடிந்த நிலையில் மற்ற பணிகள் நடந்து வருகிறது.
செப்டம்பர் 5ஆம் தேதி அப்படம் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் கலந்த சண்டை காட்சிகள் நிறைந்த படமாக ‘மதராஸி’ இருக்கும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ‘மதராஸி’ ஷாருக்கானுக்காக எழுதிய கதை என இயக்குநர் முருகதாஸ் நேர்காணல் ஒன்றில் கூறினார்.
“அக்கதை அவருக்குப் பிடித்திருந்தது. நான் நடிக்கிறேன் எனச் சொன்னார். அப்போது கதை முழுமையாகவில்லை. சிறிதுகாலம் கழித்து நான் ஷருக்கானைத் தொடர்புகொண்டபோது அவரிடமிருந்து சாதகமான பதில் எனக்குக் கிடைக்கவில்லை. அந்தக் கதையைத்தான் தற்போது சிவகார்த்திகேயனுக்காகக் கொஞ்சம் மாற்றி ‘மதராஸி’ படமாக எடுத்திருக்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.
வரும் காலங்களில் காதல் கலந்த நகைச்சுவைப் படங்களில் அதிக கவனம் செலுத்தாமல் பெரிய நடிகர்களைப்போல கதைகளைத் தேர்ந்தெடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

