விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடித்த ‘படை தலைவன்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் யாமினி சந்தர்.
இவர் வேறு யாருமல்ல, எம்ஜிஆரை வைத்து ‘அன்பே வா’, சிவாஜியை வைத்து ‘தெய்வ மகன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.சி. திருலோக சந்தரின் பேத்தி.
திருலோக சந்தரின் வாரிசுகளுக்கு திரைத்துறையில் ஆர்வம் இல்லை. ஆனால், ஒரு தலைமுறை இடைவெளிக்குப் பிறகு யாமினிக்கு அந்த ஆசை வந்துள்ளது.
ஏற்கெனவே சில படங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும், ‘படை தலைவன்’ படத்தில்தான் முதன்மை நாயகியாக நடித்துள்ளார்.
“விலங்குகள் சுற்றித்திரியும் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நடந்த படப்பிடிப்பு, புதுவித அனுபவத்தைத் தந்ததாகச் சொல்கிறார் யாமினி.
“சவாலான காட்சிகளில்கூட எளிதில் நடித்துவிட்டேன். ஆனால், காட்டில் நடந்த படப்பிடிப்புதான் மிரட்டலாக இருந்தது.
“இயக்குநர் அங்குள்ள சவால்கள் குறித்து ஏற்கெனவே விவரம் கூறியிருந்ததால், மனதளவில் என்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள முடிந்தது.
“காட்டில் நடக்கும் படப்பிடிப்பின்போது ‘கேரவன்’ வாகனம் தொலைவில் நிறுத்தப்பட்டிருக்கும். திடீரென வானிலை மாறும். நினைத்துப் பார்க்காத நேரத்தில் மழை வரும். அட்டை, வண்டு என பூச்சிகள் தொல்லை இருக்கும். அவற்றையெல்லாம் சமாளிப்பதுதான் பெரிய வேலையாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
“சண்முக பாண்டியன், கேப்டன் விஜயகாந்தின் மகன் என்பதைக் கடந்து எளிமையாக பேசிப் பழகினார். அனைவரிடமும் நட்பாக நலம் விசாரிக்கக் கூடியவர்.
“நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில்தான் படித்தோம். வளர்ந்த பிறகு, ஒரே படத்தில் இணைந்து நடிப்போம் என்று கனவில்கூட எதிர்பார்க்கவில்லை,” என்கிறார் யாமினி.
தாத்தாவின் சாதனைகள், இயக்கிய படங்களும்கூட தன்னை நடிகையாக மாறத் தூண்டுகோலாக அமைந்ததாகச் சொல்பவர், தொடக்கத்தில் நடிகையாகும் விருப்பத்தை வீட்டில் கூறியபோது, முதல் எதிர்ப்பு தாத்தாவிடம்தான் கிளம்பியது என்கிறார்.
“முதலில் ‘மாடலிங்’, பின்னர் விளம்பரங்கள், பிறகுதான் சினிமாவுக்குள் நுழைந்தேன். தாத்தா உட்பட வீட்டில் அனைவரையும் எப்படியோ சமாதானப்படுத்தி, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினேன்.
“என் நடிப்பை திரையில் பார்ப்பதற்கு முன் துரதிர்ஷ்டவசமாக தாத்தா காலமாகிவிட்டார். அவரது ஆன்மா என்னை நிச்சயம் வாழ்த்தும் என நம்புகிறேன்,” என்கிறார் யாமினி.
திரையுலகப் பின்புலம் இருப்பதால் மட்டுமே, நடிக்க வாய்ப்புகள் கிடைத்துவிடாது என்று உறுதியாகச் சொல்லும் இவர், இதுவரை தாம் எடுத்த எல்லா படங்களிலும் நடிப்புத் தேர்வின் மூலமாகத்தான் தமக்கான வாய்ப்புகளைப் பெற்றதாகச் சொல்கிறார்.
“இதுவரை ‘டைனோசர்’, ‘வால்டர்’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். இங்கு திறமை இருந்தால்தான் ஒருவரால் தாக்குப்பிடிக்க முடியும். ரசிகர்கள் நம்மை ஏற்றுக்கொள்வது மிக அவசியம். அவர்களின் பாராட்டு கிடைத்தால்தான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து, நிலையான இடத்தைப் பிடிக்க முடியும்.
“இதுவரை ‘சீரியசான’ வேடங்கள்தான் அமைந்தன. இனியாவது கலகலவெனப் பேசி, நகைச்சுவை செய்யும் வழக்கமான கதாநாயகியாக ஆடல், பாடல் காட்சிகளில் நடிக்க விரும்புகிறேன்.
“எனக்கு நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். நடனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரங்கள் அமைந்தாலும் மகிழ்ச்சி,” என்று சொல்லும் யாமினிக்கு, மற்ற இளம் நடிகைகளைப் போல் தமக்கும் பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் ஆசை உள்ளது என்கிறார்.
இவரது தந்தை ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளாராம். தாயார் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார்.
“அப்பாவிடம் சினிமா வாசம் என்பது அறவே இருக்காது. என்னைப் பொறுத்தவரை, திரைத்துறையில் சாதிக்க திறமையுடன் கூடிய அழகும் முக்கியம். கேமராவுக்கு ஏற்ற முகம் அவசியம்.
“நடிப்புத் தேர்வின்போது இந்த அம்சங்களைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். மற்றபடி, ஒல்லியாக இருக்கிறோமா, பருமனாக காணப்படுகிறோமா என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை.
“தாத்தா இயக்கிய படங்களில் அனைத்துமே எனக்குப் பிடித்தமானதுதான்.
காலஞ்சென்ற முதல்வர் எம்ஜிஆரை பல படங்களில் ஏழையாகச் சித்திரித்திருப்பார்கள். ஆனால், தாத்தா படங்களில் அவர் பணக்கார கதாபாத்திரங்களில்தான் நடித்திருப்பார்.
“’தெய்வ மகன்’ படத்தில் சிவாஜியின் அருமையான நடிப்பைக் கண்டு அசந்து போயிருக்கிறேன்,” என்கிறார் யாமினி.