சின்னத்திரை ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிநடை போடுகிறது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்-2’ தொடர். அதில் நடித்துள்ள அனைவருமே பிரபலம்தான் என்றாலும், ராஜி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாலினிக்கு சின்னத்திரையில் இதுதான் அறிமுகத் தொடர்.
இந்த முதல் தொடரே தனது வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிட்டது என்கிறார் நடிகை ஷாலினி.
“கதாநாயகி என்ற தொலைக்காட்சி ‘ரியாலிட்டி’ நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் ஷாலினி. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வேளையில்தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்-2’ தொடரில் நடிக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வந்துள்ளது.
“என்னை வெளியில் பார்க்கும் ரசிகர்கள், ‘உங்களை ரொம்பப் பிடிக்கும்’ என்று, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொல்கிறார்கள். இப்படி எல்லார் மனத்திலும் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
“`கதாநாயகி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் நடிப்பு என்றால் என்னவென்றே தெரிந்தது. அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்த நடிகை ராதிகா சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய இருவரிடமும் நிறைய கற்றுக்கொண்டேன். இருவரும் சுட்டிக்காட்டிய தவறுகளைத் திருத்திக்கொண்டேன்.
“இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் படப்பிடிப்புத் தொடக்கத்தில், ‘உங்கள் நடிப்பு இன்னும் மெருகேற வேண்டும்’ என்று கூறிய நடுவர்கள், அன்றைய படப்பிடிப்பின் முடிவில், ‘உன்னுடைய உடல்மொழி நன்றாக இருக்கிறது, நீ எங்கு சென்றாலும் வெற்றி பெறலாம்’ என்று பாராட்டினர். அந்த அளவுக்கான வித்தியாசத்தை முதல் நாளே வெளிப்படுத்தினேன். அதன் பலனாக தொடரில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
“ஆனால், ஒருசிலர் இதற்காக என்னை விமர்சித்தனர். அது குறித்தெல்லாம் கவலைப்படாமல் கடுமையாக உழைத்தேன், இனிமேலும் உழைத்துக் கொண்டே இருப்பேன்,” என்று கூறியுள்ளார் ஷாலினி.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் உடன் நடிக்கும் அனைவருமே இவரைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள். ஆனாலும், தாம் ஒரு புதுமுகம் என்ற உணர்வு அறவே ஏற்படாத வகையில், அனைவரும் இயல்பாகப் பழகியதாகச் சொல்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“எல்லாருமே என்னிடம் நன்றாகப் பேசுவார்கள். ஏதாவது தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டி, பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார்கள். ஒருமுறை குறிப்பிட்ட ஒரு காட்சியில் உணர்வுபூர்வமாக நடித்தேன். அந்தக் காட்சி முடிந்ததும் மொத்த குழுவும் மனதாரப் பாராட்டியபோது அழுகையே வந்துவிட்டது.
“என்னை மட்டுமல்ல, யார் நன்றாக நடித்தாலும் எந்தவிதத் தயக்கமும் இன்றி எல்லாரும் பாராட்டுவார்கள். இது ஓர் அழகான குழு.
“கதிர்-ராஜி ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நானும் கதிரும் ஒவ்வொரு காட்சியிலும் எவ்வாறு நடிக்க வேண்டும் எனக் கலந்து பேசுவோம். ஒருவேளை அதனால்தான் பலருக்கும் பிடித்திருப்பதாக நினைக்கிறேன்,” என்று சொல்லும் ஷாலினிக்குத் திருமணம் ஆகிவிட்டது.
கணவர் பிரபுவும் இவரைப் போல் ஓர் பொறியாளர்தான். எனினும், கிடைத்த வேலையை விட்டுவிட்டு தனக்குப் பிடித்த நடனத்தைப் பலருக்கு கற்றுக்கொடுக்கிறாராம்.
“கல்லூரியில் படிக்கும்போது நடனம் கற்பதற்காகத்தான் அவரை முதலில் சந்தித்தேன். பிறகு அவருடன் பழகியபோது நன்றாகப் பேசினார். அவரது பல குணங்கள் எனக்குப் பிடித்திருந்தன. ஒரு கட்டத்தில் நானே அவரைக் காதலிப்பதாக மனம்திறந்து சொன்னேன். பிறகு இரு வீட்டாரையும் நானே சம்மதிக்க வைத்த பின்னர் எங்கள் திருமணம் நடந்தது.
“திருமணத்துக்குப் பிறகு ‘கதாநாயகி’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவர்தான், ‘இந்தத் துறையில் நம் குடும்பத்தில் இருந்து யாருமே இல்லை. நீயாவது முயற்சி செய்து வெற்றி பெற்றால் மகிழ்ச்சிதான்’ என்று சொன்னதுடன் நிற்காமல், இன்றுவரை எனக்குப் பக்கபலமாக உள்ளார்.
“அதேபோல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்-2’ தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தபோது வீட்டில் சற்றே குழப்பம் ஏற்பட்டது. அப்போதும்கூட, ‘எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று கூறிவிட்டார். அவர் இல்லையென்றால் நான் இல்லை,” என்று வெட்கத்துடன் மகிழ்ச்சியோடு நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார் ஷாலினி.

