மீண்டும் இலங்கைத் தமிழர்களைப் பின்னணியாகக் கொண்ட கதைக்களத்தில் நடித்துள்ளார் சசிகுமார். இப்படத்துக்கு, ‘ஃப்ரீடம்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
‘கழுகு’, ‘சவாலே சமாளி’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான சத்ய சிவா இயக்கியுள்ளார்.
‘ஃப்ரீடம்’ படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் படத்துக்கும் இதே வரவேற்பு கிடைக்கும் என நம்புவதாகவும் நிதானமாகப் பேசுகிறார் சத்ய சிவா.
“கடந்த 1990ல் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் இது. சசிகுமார் ஈழத்தமிழராக நடித்துள்ளார். அவரது நடிப்பில் எந்த அம்சம் அவரது பலம் எனக் கருதப்படுகிறதோ, அதை முன்னிலைப்படுத்தி, அழுத்தமான உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தையும் கதையையும் உருவாக்கியுள்ளோம்.
“நான் படித்ததில், எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தைத் திரைப்படமாக்க முயற்சி செய்துள்ளேன். தமிழகத்தில் நடந்த ஒரு மிகப் பெரிய விஷயம் பலருக்குத் தெரியவில்லை. அதை அறியும்போது ரசிகர்களுக்கு சுவாரசியமான அனுபவத்தைக் கொடுக்கும்.
“அது என்ன நிகழ்வு, நான் எது குறித்துப் பேசுகிறேன் என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரியும். வழக்கமாக, ஈழத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட கதை என்றால், முகாம்களில் அவர்கள் சந்திக்கும் வேதனைகளைக் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
“இது அதுபோன்ற வலிநிறைந்த கதையல்ல. முழுக்க முழுக்க வித்தியாசமான கதை. தாய் நாட்டில் இருந்து குடும்பமாக தமிழகம் வந்திருப்பார்கள். பிறகு வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றுவிடுவார்கள்.
“அதற்குரிய காரணங்கள் புதிதாக இருக்கும். ஆனால், அனைவரும் ஒரே காரணத்துக்காக கைது செய்யப்படுவார்கள். அந்தக் காரணத்துக்கும் குடும்பத்தாருக்கும் எந்தவித சம்பந்தமும் இருக்காது.
“அரசாங்கத்துக்கு உண்மை தெரிந்திருந்தாலும் அவர்களை விடுவிக்க மாட்டார்கள். அதன் காரணமாக, சில ஆண்டுகளுக்கு அந்த குடும்பத்தின் வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்பதை சுவாரசியமான திரைக்கதை மூலம் விவரித்துள்ளோம்,” என்கிறார் சத்ய சிவா.
சசிகுமார் ஜோடியாக மலையாள நடிகை (‘ஜெய்பீம்’ பட நாயகி) லிஜோ மோல் நடித்துள்ளார்.
சதீஷ் நாயர் வில்லனாகவும் மாளவிகா, போஸ் வெங்கட், ‘கேடி’ தாத்தா ராமசாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
செய்யாத தவறுக்காக சிறைக்குச் செல்பவர்களின் வேதனையும் வலியும் எவ்வளவு கொடுமையானது என்பது தொடர்பான புரிதலை இந்தப் படம் கொடுக்கும் என்கிறார் இயக்குநர் சத்ய சிவா.