மகன் மனோஜ் திடீரென காலமானதால் மனமுடைந்து போனார் இயக்குநர் பாரதிராஜா. மகனை இழந்த துக்கத்தில் இருந்து இன்னும் மீண்டுவர முடியாமல் தவிக்கும் அவரை, நெருக்கமான உறவினர்கள், சொந்த ஊர் மக்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவ்வப்போது நேரில் சென்று பார்த்து வருகின்றனர். அவர்களிலும்கூட ஓரிருவருடன் மட்டுமே மனம் விட்டுப் பேசுகிறார் அவர்.
அண்மையில் பாரதிராஜாவை அவரது வீட்டில் சந்தித்த நடிகை ராதா, அச்சந்திப்பு குறித்து அளித்த பேட்டியில், “எங்களுடைய இயக்குநர் கம்பீரம் குலையாமல், பசுமையான நினைவுகளுடன் இருக்கிறார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“நான் நடித்து வந்த காலத்தில் மனோஜ் ஊட்டியில் படித்துக்கொண்டு இருந்தார். அம்மா, அப்பாவுக்கு கடைசிக் காலத்தில் பெரிய தண்டனையைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
“மகன் குறித்துப் பேசி அவருடைய சோகத்தைக் கிளற விரும்பவில்லை,” என்று ராதா கூறியுள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா தன்னிலை மறந்து காணப்படுவதாகச் சிலர் சமூக ஊடகங்களில் பரப்பிய தகவல் முற்றிலும் பொய் எனத் தெரியவந்துள்ளது.
“இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அண்மையில் நடிகை ராதிகாவின் தாயார் காலமான செய்தியைக் கேட்டு பாரதிராஜா மிகவும் வருத்தப்பட்டார்.
“ராதிகாவின் வீட்டுக்கே சென்று துக்கம் விசாரித்துவிட்டு வந்தார். அவர் நல்ல மனத்தெளிவுடன் இருக்கிறார்,” என்று பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஆனந்த விகடன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

