சம்பத் ராமை தீவிர சினிமா ரசிகர்கள் எளிதில் அடையாளம் கண்டுவிடுவார்கள். மற்றவர்களுக்காகச் சிறு அறிமுகம்.
பல ஆண்டுகளாக தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் சம்பத்ராம். சிறு சிறு வில்லன், குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு, காலம் இப்போதுதான் கனிந்திருக்கிறது.
அண்மைக் காலமாக சில படங்களில் முக்கியத்துவம் உள்ள வேடங்களில் சம்பத் ராமைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில், ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சம்பத் ராம்.
அப்படத்தில் கதம்பர்கள் இனத்தின் தலைவனாக, உடல் முழுக்க அடையாளமே தெரியாத அளவிற்கு கறுப்பு நிறத்தில் ஒப்பனை செய்துகொண்டு நடித்திருக்கிறார். எனவே, நெருக்கமானவர்களுக்குக்கூட திரையில் தாங்கள் பார்ப்பது இவர்தான் என்பது தெரியவில்லை.
படம் வெளியானபின், அதில் நடித்திருப்பது இவர்தான் என்பதை அறிந்து, ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
“இயக்குநர் ரிஷப் ஷெட்டி என்னை ஒப்பந்தம் செய்யும்போதே, ‘நடித்திருப்பது நீங்கள் என்பது யாருக்குமே தெரியாமல் போகலாம்’ என்று கூறியுள்ளார். அதனால்தான் நானும் இதுவரை யாரிடமும் இப்படம் குறித்து விவரம் பகிரவில்லை.
“உண்மையைச் சொல்லப்போனால், படத்தில் நடிக்கத் தொடங்கிய ஒரு மாதத்துக்குப் பிறகுதான் மனைவி, குழந்தைகளிடம்கூட விவரம் தெரிவித்தேன். படம் திரைகண்ட பிறகு பொதுவெளியில் விவரம் பகிர்ந்தேன்,” என்கிறார் சம்பத் ராம்.
சிறிது நேரம் வந்தாலும், தனது கதாபாத்திரம் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் என்று குறிப்பிடுபவர், படம் பார்த்த ரசிகர்கள் குரலை வைத்தே தன்னை அடையாளம் காண முடிந்ததாக கூறியபோது நெகிழ்ந்துபோனாராம்.
தொடர்புடைய செய்திகள்
“இதுவே எனக்கு அதிக மகிழ்ச்சி தந்தது. ஏற்கெனவே கன்னடத்தில் ‘சைனைட்’ என்ற படத்தில் நடித்திருந்தேன். அதில் ரிஷப் ஷெட்டி உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது முதல் அவருடன் எனக்கு அறிமுகம் உண்டு.
“அந்தப் படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் மாஸ்டர். எனவே, ரிஷப் என்னை ‘மாஸ்டர்’ என்றுதான் அழைப்பார்.
“‘காந்தாரா’ படத்துக்காக நடிப்புத் தேர்வு நடந்தபோது அவசர கதியில் பங்கேற்றேன். சரியாக செய்யவில்லையோ என்ற தயக்கம் இருந்தது. நம்பிக்கை இல்லாமல் இருந்த நிலையில், இரு வாரங்களுக்குப் பிறகு ஒப்பனைத் தேர்வுக்காக அழைத்தது இன்ப அதிர்ச்சி அளித்தது.
“என்னை நம்பி வாய்ப்பு அளித்த ரிஷப் ஷெட்டிக்கு நன்றி. அவருடன் பணியாற்றியது ஓர் அழகான அனுபவம். படப்பிடிப்பின்போது எனக்கான இடத்தையும் மரியாதையையும் தந்தார்.
“நான் முன்பு பார்த்த ரிஷப் ஷெட்டியிடம் எந்த மாற்றமும் இல்லை. அவர் அப்படியேதான் உள்ளார்,” என்று சம்பத் ராம் ஆனந்த விகடன் ஊடகப் பேட்டியில் அனுபவம் பகிர்ந்துள்ளார்.