மலையாள நடிகர் மம்முட்டிதான் முதன்முதலாகத் தமக்கு நடிப்புத் தேர்வு வைத்து, சினிமாவில் நடிப்பதற்குத் தேர்வு செய்ததாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
அந்தத் தேர்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தாம் பங்கேற்ற முதல் நடிப்புத் தேர்வு அதுதான் என்றும் அதன் பிறகே ‘பட்டம் போலே’ என்ற மலையாளப் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு தமக்குக் கிடைத்தது என்றும் கூறியுள்ளார் மாளவிகா.
இவரது தந்தை கே.யு.மோகனன், மலையாளத்தில் பிரபலமாக இருந்த ஒளிப்பதிவாளர். எனினும், தந்தையின் சிபாரிசு இல்லாமல் தமது திறமையின் மூலம் வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் மாளவிகா.
“யாருக்காவது இப்படியொரு அரிய வாய்ப்பு கிடைக்குமா? மலையாளத் திரையுலகின் ஜாம்பவனாக இருக்கும் ஒருவர், எனக்கு நடிப்புத் தேர்வு வைத்தார். அந்தக் காட்சியைப் புகைப்படமாக எடுக்கும் வாய்ப்பு அமைந்தது.
“பட்டம் போலே’ படத்துக்கு நாயகி தேவை என்ற தகவல் கிடைத்ததால் நடிப்புத் தேர்வுக்குச் சென்றேன்,” என்று சொல்லும் மாளவிகா, தமிழில் கடைசியாக நடித்த படம் ‘தங்கலான்’.
ஏற்கெனவே தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களிலும் இவரைப் பார்க்க முடியும்.
‘பட்டம் போலே’ படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஹிருதயபூர்வம்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

