தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினி படத்தின் பெயர் மாற்றம்; ரசிகர்கள் வருத்தம்

3 mins read
b28bf219-328b-4b58-b3df-6df09ba3c54d
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

நான்கு மொழிகளில் வெளியாகி நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர் கான், நாகார்ஜுனா, ஃபகத் ஃபாசில், சத்யராஜ், ஷ்ருதிஹாசன், சோபின் ஷபீர், உபேந்திரா போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் பலரும் பங்களித்துள்ள இப்படம் ஆகஸ்டு 14ஆம் தேதி திரைகாணும் என்று கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரேயொரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாகத் தெரிகிறது.

அனிருத் இசையில் ‘சிக்கிடு’ என்ற பாடல் புதன்கிழமை (ஜூன் 25) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

பட வெளியீட்டுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில் இந்திமொழியில் இப்படத்தின் பெயர் மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழிலாளி எனப் பொருள்படும் வகையில் ‘மஜ்தூர்’ என்று பெயரை மாற்றியுள்ளதாம் படக்குழு.

‘கூலி’ படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், பாடல் வெளியீடு குறித்த தகவலில், படத்திற்கு இந்திமொழியில் பெயர் மாற்றப்பட்டிருப்பது பற்றிக் குறிப்பிட்டது.

‘கூலி’ திரைப்படத்தின் பெயர் இந்திமொழியில் ‘மஜ்தூர்’ என்று மாற்றப்பட்டுள்ளது.
‘கூலி’ திரைப்படத்தின் பெயர் இந்திமொழியில் ‘மஜ்தூர்’ என்று மாற்றப்பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

பெயர் மாற்றத்துக்கான காரணம் என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை.

இருப்பினும், இந்தியில் ஏற்கெனவே அமிதாப் பச்சன் நடிப்பில் 1983ஆம் ஆண்டு ‘கூலி’ என்ற படமும் 2020ல் வருண் தவான் நடித்த ‘கூலி நம்பர் 1’ என்ற படமும் வெளியானதால் இதற்குப் பெயர் மாற்றப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

‘சென்டிமென்ட்’ எனப்படும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் மனப்போக்கும் காரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அமிதாப் ‘கூலி’ என்ற படத்தில் நடித்தபோது அவர் மிகப் பெரிய விபத்தைச் சந்தித்தாராம். அதனால் அந்தப் பெயர் ‘ராசியில்லை’ என்று கூறப்பட்டதாகவும் ஆனால் அது புரளிதான் என்று சொல்லப்படுவதாகவும் வேறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

அமீர் கானும் நாகார்ஜுனாவும் அவரவர் பங்கிற்கு இப்படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அமீர் கான் இதுவரை தன்னுடைய படத்துக்குக்கூட இவ்வாறு விளம்பர நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என்பதைப் பலரும் சுட்டுகின்றனர்.

தமிழ்த் திரையுலகில் வெவ்வேறு காரணங்களுக்காக திரைப்படங்களுக்கு முதலில் அறிவிக்கப்பட்ட பெயர்கள் பின்னர் மாற்றப்பட்டதுண்டு.

எடுத்துக்காட்டாக, கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘சண்டியர்’ என்ற படத்தின் பெயர், வெளியீட்டுக்கு முன்பாக ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டது.

ரஜினிகாந்த் படம் என்று எடுத்துக்கொண்டால், ‘ரோபோ’ எனப் பெயரிடப்பட்ட படம் ‘எந்திரன்’ என்று மாற்றம்கண்டு வெளியானது.

அதேபோல் ரஜினியின் ‘பொல்லாதவன்’, கமலின் ‘தேவர் மகன்’, விக்ரம் நடித்த ‘சேது’ போன்ற படங்களுக்கெல்லாம் தொடக்கத்தில் வேறு பெயர்கள் இடப்பட்டிருந்ததாகவும் பின்னர் அவை மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளியீட்டிற்குமுன் பெயர் மாற்றப்பட்ட படங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, அஜித்தின் ‘காட்ஃபாதர்’ படத்தின் பெயர் ‘வரலாறு’ என்று மாற்றப்பட்டது. சாய் பல்லவி நடித்த ‘தியா’ எனும் திரைப்படம் படமாக்கப்பட்டபோது ‘கரு’ என்று பெயரிடப்பட்டிருந்ததாகவும் பின்னர் அப்பெயர் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘மீண்டும் சூர்யோதயம்’ என்ற படம் 1986ல் வெளியானது. அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சியின்கீழ் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியுற்று, தி.மு.க. பெருவெற்றி பெற்ற காலகட்டம் என்பதால் மறைமுகமான அரசியல் சார்பு என்ற கண்ணோட்டத்தை மாற்றும் பொருட்டு ‘நானும் ஒரு தொழிலாளி’ என்று அப்படத்தின் பெயர் மாற்றப்பட்டது. ஏற்கெனவே ஸ்ரீதர் எம்.ஜி.ஆரை வைத்து நானும் ஒரு தொழிலாளி என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்கத் தொடங்கி பின்னர் அதைக் கைவிட்டிருந்தார். கமலை இயக்கிய படம் வெளியானது தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி என்பதால் பெயர் மாற்றம் பொருத்தமாகவும் அமைந்தது.

ஒரு படம் வேறு மொழியில் வெளியாகும்போது பெயர் மாற்றப்பட்ட சம்பவங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, ‘முகல்-ஏ-ஆசாம்’ என்ற இந்திப் படம் தமிழில் ‘அக்பர்’ என்று மாற்றப்பட்டது. ‘பாக்கெட்மார்’ என்ற இந்திப் படம் ‘திருடாதே’ ஆனது.

சில பெயர்கள் சர்ச்சைக்குரியவை என்று கருதப்பட்டதாலும் விளம்பரக் காரணங்களுக்காகவும் பெயர் மாற்றப்பட்டதுண்டு. தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை கிடைக்கும் என்பதற்காகவும் சில படங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன.

இப்படிப் பல்வேறு காரணங்களுக்காகத் திரைப்படங்கள் பெயர் மாற்றம் கண்டன.

எது எப்படியிருந்தாலும் ‘கூலி’ என்ற பெயர் இந்திமொழியில் மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு வருத்தம் அளித்திருப்பதாக இணையத் தகவல்கள் கூறுகின்றன. இதனால், ‘மஜ்தூர்’ என்ற பெயரும் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்